3877. தத்துவ பதியே தத்துவம் கடந்த
தனித்ததோர் சத்திய பதியே
சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
தமக்குளே சார்ந்தநற் சார்பே
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
பெறல்அரி தாகிய பேறே
புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
பொதுநடம் புரிகின்ற பொருளே.
உரை: தத்துவங்கட்குத் தலைவனாக உள்ள பெருமானே! தத்துவங்கள் எல்லாம் கடந்த, தத்துவாதீதனாய்த் தனித்து விளங்கும் உண்மைப் பதிப்பொருளே! மெய்ம்மை நெறியைச் சார்ந்த சன்மார்க்கர்களாகிய பெருமக்களைச் சார்ந்து, அவர்களுக்கு நல்ல சார்பாக உள்ள தலைவனே! சமயக் கொள்கையில் பித்துற்று ஒருவரோடு ஒருவர் பொருது வருந்தும் அஞ்ஞானிகட்குப் பெறுதற் கரிதாகிய ஞானச் செல்வமே! அருள் ஞானமாகிய அமுதை எனக்குத் தந்து, என்னுளத்திலே கலந்து அம்பலத்தில் நடம் புரிகின்ற சிவ பரம்பொருளே, வணக்கம். எ.று.
தத்துவங்கள் ஒவ்வொன்றுக்கும் தலைமைப் பொருளாய் இருந்து ஒவ்வொன்றும் தனக்குரிய செயலைத் தவறாமல் நடத்துமாறு ஆளுகின்றானாதலின் இறைவனை, “தத்துவ பதியே” எனவும், தத்துவங்கட்குத் தலைவனாகியும் அவற்றுள் கலவாமல் அவை எல்லாவற்றையும் கடந்து, அப்பாலாய் விளங்குகின்ற உட்பொருளாகிய பரமனாதலால், “தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே” எனவும் கூறுகின்றார். சத்துவ குணத்தராய் நன்னெறியில் ஒழுகுபவர் சத்துவச் சன்மார்க்கராதலின், அவரிடையே நின்று அவர்கட்கு அழியாப் பெருந் துணைவராதலால் சிவனை, “சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர் தமக்குள்ளே சார்ந்த நற்சார்பே” எனப் புகழ்கின்றார். சமயக் கொள்கைகள் தோய்ந்த உள்ளத்தால் அவற்றின் பொருட்டுப் பிறரோடு பிணங்கிப் பேதுறும் ஞானத் தெளிவில்லாதவர்களைப் “பித்துறு சமயப் பிணக்குறும் அவர்” என்று குறிக்கின்றார். தெளிந்த ஞானம் இல்லாமையால் இறைவன் திருவருளைப் பெறுவது அவர்கட்கு அரிதாதலால், “பிணக்குறும் அவர்க்குப் பெறல் அரிதாகிய பேறே” என்று உரைக்கின்றார். அருள் ஞானம் எய்துந் தோறும் புதிய புதிய இன்பம் தோன்றி இறைவன் தன்னுட் கலந்திருக்கும் நிலை யுணர்த்தி, மகிழ்வித்தலின், “புத்தமுது அளித்து என் உளத்திலே கலந்து பொது நடம் புரிகின்ற பொருளே” என்று புகல்கின்றார்.
இதனால், பொது நடம் புரியும் சிவபெருமான், தத்துவம் கடந்த சத்திய பதியாய், சன்மார்க்கச் செல்வர்கட்கு நல்ல சார்பாய், சமய வெறி கொண்டு பிணங்கும் பேதை மாக்களுக்குப் பெறலரியனாய் விளங்கும் திறன் எடுத்தோதியவாறாம். (6)
|