3878. மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
விளைவெலாம் காட்டிமெய் வேத
நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
நோக்கமே ஆக்கமும் திறலும்
நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
நாயகக் கருணைநற் றாயே
போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
உரை: அம்பலத்தில் ஆடல் புரிகின்ற பரம்பொருளே! தத்துவ வெளிகட்கு மேலாயுள்ள பரவெளியைக் காட்டி, அவ்வெளியின்கண் தோன்றுகின்ற ஞான நலங்களையெல்லாம் காணச் செய்து, மெய்ம்மை சான்ற வேதங்கள் உரைக்கிற ஞான நெறியைக் காட்டி, எனக்குள்ளே எழுந்தருளி விளக்கம் தருகின்ற ஞானக் கண்ணே! ஞானச் செல்வமும் ஞான வன்மையும் அறம் முதலிய நால்வகைப் பயனையும் எனக்கு அறிவித்து வளர்த்தருளுகின்ற தலைமையான கருணையே உருக்கொண்ட நல்ல தாய் போன்றவனே! என்னுடைய உயிர்க்குயிராய் என்னுள் பொருந்திய அருள் ஞானமாகிய மருந்தே, வணக்கம். எ.று.
தத்துவ வெளிகட் கெல்லாம் மேலதாகிய பரவெளியை “மேல் வெளி” என்றும், அந்தப் பரவெளியில் தோன்றி இன்பம் செய்கின்ற ஞான நலன்களை, “வெளியிலே விளைந்த விளைவு” என்றும் விளம்புகின்றார். மெய்ம்மைப் பொருளை விளக்குவனவாய் அதனைக் கடைப்பிடிப்பதற்குரிய நெறியைக் காட்டுவனவாய்த் திகழ்வது பற்றி வேதங்களை, “மெய் வேத நூல்” எனவும், வைதீக நூற்பொருள் உள்ளத்திலிருந்து ஞான விளக்கம் தருவது பற்றி, “என்னுள்ளே விளங்கும் நோக்கமே” எனவும், அதனால் தமக்குண்டாகும் ஞானச் செல்வத்தையும் அதனால் பெறும் ஆற்றலையும், “ஆக்கமும் திறலும்” எனவும், இவ்வாற்றாம் உறுதிப் பொருட்களாகிய அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கையும் உணர்வித்து உலகில் ஓங்கச் செய்தலின், “நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும் நாயகக் கருணை நற்றாயே” எனவும் இயம்புகிறார். உயிர்க்குயிராயிருந்து உணர்வு தந்து ஊக்குதலின், “உயிர்க்குயிராய்ப் பொருந்திய மருந்தே” என்று புகல்கின்றார்.
இதனால், வைதீக ஞானநெறியும், அறம் முதலிய உறுதிப் பொருட் பயனும் தமக்கு அருளிய திறத்தைத் தெரிவித்தவாறாம். (7)
|