3879.

     அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
          அரும்பெருஞ் சோதியே சுடரே
     மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
          மருந்தெலாம் பொருந்திய மணியே
     உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
          உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
     புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     அம்பலத்தில் ஆடல் புரிகின்ற சிவபரம் பொருளே! வாழ்வில் உளவாகும் மன வலைச்சல்களை இல்லையாக்கி, விளங்குகின்ற அருளாகிய பெருவிளக்கமே! அரும் பெருஞ் சோதியே! சோதிக்குள் விளங்கும் அருட் சுடரே! மலத் தொடர்பால் உளதாகும் துன்பங்களைப் போக்கி யருளிய, மெய்ம்மை சான்ற மருந்து போல்பவனே! மருந்தின் தன்மைகளெல்லாம் தனக்குள் பொருந்திய மணியாகியவனே! கெடுதலில்லாத திருவருட் செல்வமே! எல்லா உயிர்க்குள்ளும் நிறைந்திருக்கின்ற ஒப்பற்ற உணர்வாகிய மெய்ப்பொருளே! ஐம்புலன்களாகிய பகைப் பொருளை நீக்குகின்ற, பூரணமான மேன்மைப் பொருளே, வணக்கம். எ.று.

     அலம்பற என்பது அலப்பற என வந்தது. அலம்புதல் - அசைதல். இறைவன் திருவருள் அன்பர் உள்ளத்தில் இன்ப ஒளி தருவதாதலின், “அலப்பற விளங்கும் அருட் பெருவிளக்கே” என்று உரைக்கின்றார். இறைவனருளால் உள்ளத்தில் எழுகின்ற ஞானவொளி அருமையும் பெருமையும் உடைய தென்பது பற்றி, “அரும் பெருஞ் சோதியே சுடரே” என்று போற்றுகின்றார். அருள் மயமாய் ஞானச் சுடராய் விளங்குவது பற்றிச் சிவனை, “ஆதியும் அந்தமுமில்லா அரும் பெருஞ் சோதி” என்று (எம்பா) மாணிக்கவாசகரும் உரைப்பது காண்க. ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றன் தொடர்பால் உயிர்கட்குத் துன்பம் விளைதலின் அதனை, “மலப்பிணி” என்றும், அதனைப் பற்றறக் கெடுப்பது பற்றிப் பரம்பொருளை, “மலப்பிணி அறுத்து வாய்மை எம் மருந்தே” என்றும் புகல்கின்றார். பல்வேறு நோய்களைப் போக்குதற்கு மருந்துகள் பலவாதலின், அம்மருந்துகளின் தன்மையெலாம் தன்பால் கொண்டமை விளங்கச் சிவமாகிய மணியை, “மருந்தெலாம் பொருந்திய மணியே” என்று மகிழ்ந்து உரைக்கின்றார். மருந்தும் மணியும் மந்திரமும் என்ற மூன்றும் பண்டை நாளில் நம் தமிழ்நாட்டு மருத்துவர் கைக்கொண்டிருந்தமையின் வடலூர் வள்ளல் இவ்வாறு கூறுகின்றார். உலப்பு - கெடுதல். இறைவனது கருணையாகிய செல்வம் என்றும் கெடுதலில்லாத சிறப்புடையதாகலின், “உலப்பறு கருணைச் செல்வமே” என்று கூறுகிறார். உயிர் வகைகள் எல்லாவற்றினுள்ளும் உணர்வுருவாய் இறைவன் நிறைந்திருப்பது பற்றி, “எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே” என்று போற்றுகின்றார். கண் காது முதலிய பொறி ஐந்தின் வழியாக ஒளி ஓசை முதலிய புலன்களால் விளையும் ஆசை என்னும் நோய் தருவனவாதலால் அவற்றை, “புலப்பகை” என்றும், அவற்றால் நோயின்றி மெய்ஞ் ஞானம் கைவர உதவுதல் பற்றி, “பூரண வரமே” என்றும் போற்றுகின்றார். வரம் - மேலான பொருள்.

     இதனால், சிவ பரம்பொருளை அருட் பெருவிளக்கு என்றும், அரும்பெருஞ் சோதியும் சுடரும் ஆவதென்றும், மருந்தெலாம் பொருந்திய மணி என்றும் புகழ்ந்தவாறாம்.

     (8)