3880.

     பரம்பர நிறைவே பராபர வெளியே
          பரமசிற் சுகந்தரும்பதியே
     வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்
          வயங்கிய பெருஞ்சுடர் மணியே
     கரம்பெறு கனியே கனிவுறு சுவையே
          கருதிய கருத்துறு களிப்பே
     புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     மேன்மேல் உயர்ந்து நிறைந்து விளங்கும் பரம்பொருளே! மேலும் கீழுமாக எல்லா உலகங்களையும் சூழ்ந்து கொண்டிருக்கும் ஆகாசமே! மேலான ஞான வின்பத்தை நல்கும் பதிப் பொருளே! மேன்மை பெற்ற சிவநெறிச் சன்மார்க்க நன்மக்களின் அறிவில் விளங்குகின்ற பெரிய சுடரையுடைய மாணிக்க மணி போல்பவனே! கையிலே கிடைத்த கனி போல்பவனே! கனியின்கண் நிரம்பியுள்ள சுவையாகியவனே! நினைக்கின்ற நினைவின்கண் இன்பம் தருகின்றவனே! சிவபுரத்தார் புகழ்ந்து போற்றுகின்ற ஞானச் செல்வமே! வேதங்களின் உச்சியிலிருந்து யாவராலும் விரும்பப்படுகின்ற கதிப்பொருளே! அம்பலத்தில் ஆடல் புரிகின்ற பெருமானே, வணக்கம். எ.று.

     பரம்பரம் - மேன் மேல். ஈண்டு அடுக்கு மேன் மேலுயர்ந்த நிலைகள் உணர்த்துகின்றது. பரம் - மேல். அபரம் - கீழ். பராபர வெளியாவது எல்லா அண்டங்களுக்கும் மேலும் கீழுமாய்ச் சூழ்ந்திருக்கும் பராகாசம். அதுவும் சிவத்தின் பெருவடிவமாதலின், “பராபர வெளியே” என்று சிவனைப் பரவுகின்றார். சிற்சுகம் - ஞான வின்பம். ஞானத்தால் உணர்ந்து ஞான நெறியால் பெறப்படுவது பற்றி ஞான வடிவாகிய சிவபரம் பொருளை, “பரம சிற்சுகம் தரும் பதி” என்று சிறப்பிக்கின்றார். வரம் - மேன்மை. சிவநெறியில் நிற்கும் சன்மார்க்கச் செல்வரைச் சிவ சன்மார்க்கர் என்று புகழ்கின்றார். அப்பெருமக்களின் அறிவின்கண் இருந்து ஞான வின்ப விளக்கம் தருதலால், “சன்மார்க்கர்தம் மதியில் வயங்கிய பெருஞ் சுடர் மணியே” என்று போற்றுகின்றார். நன்கு சுவை மிகப் பழுத்துக் கைமேல் கிடைப்பது போல்வது பற்றிச் சிவனை, “கரம் பெறு கனியே” என்றும், கனியினும் கனியுள் நிறைந்த அவை சிறப்புடைத்தாதல் பற்றி, “கனிவுறு சுவையே” என்றும், அதனை நினைக்கும் தோறும் நினைவின்கண் இன்பம் சுரந்து மகிழ்வித்தலின், “கருதிய கருத்துறு களிப்பே” என்றும் ஏத்துகின்றார். புரம் - சிவபுரம்; சிவலோகத்தில் சிவ பரம்பொருள் உறையும் நகரம் என்பது கருத்து. சிவபுரத்தில் வாழும் முத்தான்மாக்கள் பெற்று மகிழும் பெருஞ் செல்வம் என்பது பற்றி, “புரம் புகழ் நிதியே” என்று புகல்கின்றார். சிரம் - வேத சிரம். அஃதாவது வேதங்களின் முடிவு நிலை. வேதாந்தங்களில் ஓதப்படுகின்ற சிவ பதத்தை, “சிரம் புகல் கதி” என்று தெரிவிக்கின்றார்.

     இதனால், சிவ பரம்பொருள் பரம்பர நிறைவாய், பராபர வெளியாய், பரம சிற்சுகம் தரும் பதியாய், சிவசன்மார்க்கப் பெருஞ் சுடர் மணியாய் விளங்குவது எடுத்தோதியவாறாம்.

     (9)