3881. வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
கருணைவான் அமுதத்தெண் கடலே
அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
ஆனந்த மர்மஅனு பவமே
பொற்புறு பதியே அற்புத நிதியே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
உரை: மறை முடியில் நிறுத்தப்பட்ட தூணின் மேலேற்றி ஆங்குள்ள மெய்ம்மை நிலையில் இருக்க வைத்த அற்புதப் பொருளே! கல்வி நிறைந்த கருத்தின்கண் இன்பம் சுரக்கின்ற கரும்பு போல்பவனே, கருணையாகிய பெரிய அமுதம் நிறைந்த கடலாகியவனே! அன்பு நெறியில் உருவாகும் அறிவின்கண் திகழும் அருள் ஒளியாய் இன்பமாய் இன்ப அனுபவமாய் அழகு மிகும் பதிப் பொருளே! அற்புத அருட் செல்வமே! அம்பலத்தில் நடம் புரிகின்ற பரம்பொருளே, வணக்கம். எ.று.
யோக முடிவாகிய ஆஞ்ஞையை வெற்பு என்றும், அதற்கு மேற் செல்லும் துவாதசாந்தத்தைத் தம்பம் என்றும், அதன் மேல் பெறப்படுகின்ற ஞானச் சந்திராமுத போகநிலையை மெய்நிலை என்றும் இங்கே குறிக்கின்றார். மூலாதாரத்தினின்றும் எழுப்பி மேன் மேலும் உயர்த்தி ஆஞ்ஞை நிலை காறும் உயர்த்திய சிறப்பை, “வெற்புறு முடியில் தம்ப மேலேற்றி மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே” என்று குறிப்பாக உரைக்கின்றார். தற்புறு கருத்து - கல்வி ஞானம் நிறைந்த உள்ளம். கற்றவர் உள்ளத்தில் கரும்பு போல் இனிக்கின்றவன் என்பது பற்றி, “கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே” என்றும், அருட் கடலாகிய பெருமானிடத்து ஞானமாகிய அமுது பெறப் படுதலின், “கருணை வான் அமுதத்து ஒண்கடலே” என்றும் கூறுகின்றார். அன்பு நெறியில் பெறலாகும் மெய்யறிவை “அற்புறும் அறிவு” என்றும், அவ்வறிவின்கண் அருளொளி நல்கி ஞான ஆனந்த அனுபவம் பெறுவித்தலின், “அற்புறும் அறிவில் அருளொளியாகி ஆனந்தமாம் அனுபவமே” என்றும் அறிவிக்கின்றார். பொற்புறு பதி - அழகும் இன்பமும் நிறைந்த பதிப் பொருள் என்றற்கு, “பொற்புறு பதி” என்று புகல்கின்றார். சிவத்தின் திருவருளாகிய நிதி நுகருந் தொறும் வியப்பை விளைவித்தலின், “அற்புத நிதியே” என்று பாராட்டுகின்றார்.
இதனால், யோக நெறியில் ஆன்மாவை மெய்ந்நிலைக்கண் உயர்த்தி இன்பம் நுகர்விக்கும் திருவருட் டிறம் தெரிவித்தவாறாம். (10)
|