3882.

     தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்
          தரவல்ல சம்புவே சமயப்
     புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த
          புண்ணியர் நண்ணிய புகலே
     வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா
          வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே
     பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     அழகமைந்த பொற் சபையிலும் ஞான சபையிலும் நடம் புரிகின்ற பெருமானே! தன்மை இதுவென்று அறிய முடியாத தலைவனே! வேண்டுவார்க்கு வேண்டுவன வெல்லாம் தருகின்ற சிவனே! சமயக் கொள்கை வெறி பொருந்திய கீழ்மையை நீக்கி, அகமும் புறமும் ஒத்த பண்புடைய புண்ணியப் பெருமக்கள் அடைகின்ற புகலிடமே! வன்மை பொருந்திய மனத்தை மென்மையாகிய நற்புண்புடையதாக விளங்குவித்து அதன்கண் எழுந்தருளுகின்ற மெய்ம்மை வாழ்வையுடைய பெருமானே, வணக்கம். எ.று.

     பொன் வேய்ந்த அம்பலமாதலின் அதனை, “கனகப் பொது” என்றும், அதனின் வேறாகிய ஞான சபையை “ஞானப் பொது” என்றும் குறிக்கின்றார். தன்மை இதுவென மக்களால் அறிய முடியாத மேலோனாதலின் சிவனை, “தன்மை காண்பரிய தலைவன்” எனவும், வேண்டுவார் வேண்டுவன வெல்லாம் தந்தருளும் வள்ளலாதலின், “எல்லாம் தர வல்ல சம்புவே” எனவும் இயம்புகின்றார். “தன்மை யாரும் அறிவாரில்லை” (ஐயா) என்றும், “இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மான்” (ஆரூர்) என்றும் சான்றோர் உரைப்பது காண்க. சமயப் புன்மையாவது சமய நெறிகளில் பொய்யும் வழுவும் பொருந்திய கொள்கைகளை மெய்ம்மை யுடையன வென எண்ணி அவற்றை விடாப் பிடியாய் மேற்கொண்டு பூசல் விளைவிக்கும் கீழ்மைத் தன்மை. உண்மை ஞானத்தால் அக்கீழ்மையைப் போக்கி, உள்ளும் புறமும் ஒத்தமைந்த நற்பண்புடைய சிவஞானிகளுக்கு இனிய புகலிடமாதல் பற்றி, “புன்மை நீத்து அகமும் புறமும் ஒத்தமைந்த புண்ணியர் நண்ணிய புகலே” என்றும், இரக்கமும் அருளும் ஈகையுமாகிய தன்மையில்லாத கல்மனமுடையவர்களின் உட்புகுந்து அவரது மனப் பண்பை மாற்றி மென்மையும் அறவுணர்வும் உடைய செம்மை பொருந்திய மனமாக்கி அருள் செய்யும் செம்மைத் தன்மை பற்றிச் சிவனை, “வன்மை சேர் மனத்தை நன்மை சேர் மனமா வயங்குவித்து அமர்ந்த மெய் வாழ்வே” என்றும் விளம்புகின்றார். கொலையும் புலையுமாகிய வன்கண்மை நிறைந்த மனமுடைய கண்ணப்பர் திருவுள்ளத்தில் புகுந்து அன்புருவாக்கி ஆட்கொண் டருளிய மெய்ம்மைத் திறம் ஈண்டு நினைக்கப்படுகின்றது.

     இதனால், கல்மனத்தை மாற்றி, நன்மனமாக்கும் சிவனுடைய அருள் நலம் உரைக்கப்பட்டவாறாம்.

     (11)