3883. மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே
முடிபெலாம் கடந்ததோர் முதலே
தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
சத்தியத் தனிநடு நிலையே
மேவிய நடுவில் விளங்கிய விளைவே
விளைவெலாம் தருகின்ற வெளியே
பூவியல் அளித்த புனிதசற் குருவே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
உரை: அம்பலத்தில் நடம் புரிகின்ற பெருமானே! நாதாந்தம் முதலாக ஓதப்படுகின்ற அறுவகை அந்தங்களால் முடிவு காணப்பட்ட முடிபொருளே! அந்த முடிவுகள் எல்லாவற்றையும் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் முதற்பொருளே! முதலும் ஈறும் இவை யெனக் காண்பரிதாகிய சத்தியத்தின் இடை விளங்கும் நிலைப் பொருளே! அந்நடுவில் விளங்கிய ஞானப் பயனே! அப்பயன்களை எல்லாம் தந்தருளுகின்ற பரவெளியே! உலகியல் வாழ்வை அளித்து வாழ்விக்கும் தூய சற்குருவே, வணக்கம். எ.று.
மூவிரு முடிபுகளாவன: நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், வேதாந்தம், கலாந்தம், சித்தாந்தம் (3667) என வரும். இக் கருத்தையே “ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே” என்று பிறிதோரிடத்தும் வள்ளலார் உரைப்பது காண்க. யோகாந்த முதலிய அந்தங்களின் முடிபொருளாவதே யன்றி அவற்றிற்கு அப்பாலும் கடந்து நிலவுவதால், “முடிபெலாம் கடந்ததோர் முதலே” என மொழிகின்றார். முதல், இடை, கடை எனப் பொருட்களைக் கூறு செய்து காண்பதியல்பாதலின், முதலும் ஈறுமாகிய இரண்டையும் “தாவிய முதலும் கடையும்” எனப் பிரிக்கின்றார். மெய்ம்மைக்கு முதலுமாகாது இறுதியுமாகாது நடுநின்று திகழ்தலின் பரம்பொருளை, “மேவிய நடுவில் விளங்கிய விளைவே” எனவும், இவ்விளைவுகட்கு எல்லாம் விரிந்த இடமாதல் தோன்ற, “விளைவெலாம் தருகின்ற வெளியே” எனவும் இயம்புகின்றார். அனாதி மலப்பிணிப்பு நீங்கி உய்தி பெறுதற் பொருட்டுப் பூவுலக வாழ்வை அளித்து வாழ்வியலையும் உயிர்க்குயிராய் உள் நின்று உணர்த்துவது பற்றி, “பூவியல் அளித்த புனித சற்குருவே” எனப் புகல்கின்றார்.
இதனால் ஆறந்தங்களையும் கடந்து மெய்ம்மைக்கு நடுநிலையாய்ப் பூவியல் வாழ்வளித்த இறைவனின் பெருமையைத் தெரிவித்தவாறாம். (12)
|