3884.

     வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
          விளம்பிய அனுபவ விளைவும்
     போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
          போனது மாய்ஒளிர் புலமே
     ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
          விருநிலத் தியல்அருள் ஒளியால்
     பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     வேதங்களையும் அவற்றின் பொருளையும், அப்பொருளால் அடையும் பயனையும், அவை அடையும் முறையையும், இவற்றுள் எடுததோதிய அனுபவப் பயனும், அனுபவ ஞானமும் ஞான இன்பமுமாகிய இவைகளின் உருவாய், பின்னர் அவற்றின் மறைவாய் ஒளிர்கின்ற அறிவுப் பொருளே! துன்ப மெய்தி வருந்துகின்ற ஏழையாகிய என் பொருட்டு, இந்நிலவுலகில் நிலவுகின்ற நின் திருவருள் ஒளியால் பூதங்களின் கூட்டமாகிய இவ்வுலக வடிவைக் காட்டி, என்னுளத்தே எழுந்தருளித் திருநடம் புரிகின்ற பெருமானே, வணக்கம். எ.று.

     வைதீக நெறியையும் அந்நெறியின் பயனையும் அனுபவ திறத்தையும் ஞானத்தையும், ஞானப் பயனையும் அறிவாலறிந்து உய்தற்கு ஏற்ப விளங்குகின்ற அறிவுருவே இறையருள் என்பது விளங்க, “வேதமும் பொருளும் பயனும் ஓர் அடைவும் விளம்பிய அனுபவ விளைவும் போதமும் அகமுமாகி இங்கு இவைகள் போனதுமாய் ஒளிர் புலமே” என வுரைக்கின்றார். மலப் பிணிப்பால் உலகியலில் துன்பங்கள் பலவற்றை எய்தி வருந்தி அறிவிழந்து துன்புறுகின்ற நிலையைப் புலப்படுத்தற்கு, “ஏதமுற்று இருந்த ஏழையேன் பொருட்டு” என்றும், உலகியல் வாழ்வால் அருள் ஞானத்தைப் பெற்று நில நீர் நெருப்பு முதலிய ஐம்பெரும் பூதங்களின் உருவே இறை யுருவமென உணரக் காட்டிய திறத்தை, “இரு நிலத்தியல் அருள் ஒளியால் பூத நல்வடிவம் காட்டி என்னுளத்தே பொது நடம் புரிகின்ற பொருளே” என்றும் புகல்கின்றார்.

     இதனால், இறைவன் வைதீக ஞானமாகவும், அருளொளியால் பூதவுலக ஞானமாகவும் காட்டியருளுகின்ற திறம் தெரிவித்தவாறாம்.

     (13)