3885.

     அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
          அருள்வடி வெடுத்தெழுந் தருளி
     நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
          நிலைஎலாம் அளித்தமா நிதியே
     மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
          வயங்கநல் வரந்தந்த வாழ்வே
     பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     திருநீறு அணிந்து பொன் மலை போல் ஒளி செய்கின்ற நெருப்பு வடிவுடைய பெருமானே! அம்பலத்தில் ஆடுகின்ற பரம்பொருளே! அடியவனான என் பொருட்டு, நிலத்தின் மேல் மிக்க அருள் வடிவு கொண்டு என்பால் எழுந்தருளித் திருமால் முதலிய தேவர்கள் பெறுதற் கரிய சித்தி வகைகள் பலவற்றையும் யான் பெற அருளிய அருட் செல்வமே! எக்காலத்தும் நிலைகுலையாத சுத்த சன்மார்க்க நெறி நின்று விளங்க நல்ல வரம் தந்த என வாழ்முதலே, வணக்கம். எ.று.

     பொடி - திருநீறு. வெண்ணிறப் பொடியாகத் தோன்றுதலின் பொடி எனப்படுகிறது. இதனை வெண்பொடி என்றும் விளம்புவர். பொன்னிற மேனியும் நெருப்பு ஒத்த ஒளியும் உடையவனாதலின் சிவபெருமானை, “பொடியணி கனகப் பொருப்பு ஒளிர் நெருப்பே” என்று குறிக்கிறார். சிவனுடைய திருவடி ஞானம் தம்மில் நிறைந்திருப்பது விளங்க, “அடியனேன்” என்றும், உலகியல் அன்புருவான குருபரன் வடிவில் எழுந்தருளியது தோன்ற, “அவனி மேல் கருணை அருள் வடிவு எடுத்து எழுந்தருளி” என்றும், குருபரன் தமக்கருளிய ஞானத்தால் தமக்குத் திருமால் முதலிய தேவர்களும் பெறலாகாத சித்தியும் ஞானமும் எய்தினமை தோன்ற, “நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி நிலை எலாம் அளித்த மாநிதியே” என்றும் இயம்புகின்றார். தாம் உலகில் நிலை நாட்டி உபதேசித்துப் பேணி வளர்க்கும் சுத்த சன்மார்க்கம் ஓங்குதல் வேண்டு மென்ற தமதார்வம் புலப்பட, “மடிவுறாது என்றும் சுத்த சன்மார்க்கம் வயங்க நல்வரம் தந்த வாழ்வே” என்று எடுத்துரைக்கின்றார்.

     இதனால், தாம் மேற்கொண்டு பரப்பும் சுத்த சன்மார்க்கம் மடிவுறாது வளம் பெற வேண்டுமென இறைவனைப் போற்றியவாறாம்.

     (14)