3886.

     என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்
          இதயத்தில் இருக்கின்ற குருவே
     அன்புடை அரசே அப்பனே என்றன்
          அம்மையே அருட்பெருஞ் சோதி
     இன்புறு நிலையில் ஏற்றிய துணையே
          என்னுயிர் நாதனே என்னைப்
     பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே
          பொதுநடம் புரிகின்ற பொருளே.

உரை:

     அம்பலத்தில் ஆடல் புரிகின்ற பரம்பொருளே! யான் செய்த பிழைகள் அத்தனையும் பொறுத்தருளி என்னுடைய இதய தாமரையில் வீற்றிருக்கின்ற குருபரனே! அன்புருவாகிய அருளரசே! எனக்கு அப்பனும் அம்மையுமாகிய பெருமானே! அருட் பெருஞ் சோதியே! என்றும் இன்பமே நுகர்ந்திருக்கும் ஞான நிலையில் என்னை உயர்த்திய துணைவனே! என் உயிர்க்கு நாதனே! எனக்குப் பொன் மாலையை அணிந்த ஒப்பற்ற பதிப் பொருளே, வணக்கம். எ.று.

     முக்குண வயத்தால் முறை பிறழ்ந்து குற்றம் பல செய்யும் இயல்புடையவனாதலால் என்னைப் பொறுத்தருளி என்னையும் அருளொளியால் தூய்மை செய்து என்னுடைய இதயமாகிய தாமரையில் எழுந்தருளி ஞானவொளி செய்யும் குரபரன் என்று சிவனைப் பரவுகின்றாராதலால், “என் பிழையனைத்தும் பொறுத்தருள் புரிந்து என் இதயத்தில் இருக்கின்ற குருவே” என்று இயம்புகின்றார். உலகுயிர்கட்கு அப்பனும் அம்மையுமாய் அன்பு செய்து நன்னடை பெறுவிப்பதால், “அன்புடை அரசே அப்பனே அம்மையே” என்று போற்றுகின்றார். திருவருள் ஞான வுருவாய் சிவவொளி பரப்புதலால் சிவபெருமானை, “அருட் பெருஞ் சோதி” என்று புகழ்கின்றார். உலகியல் துன்பங்களிலிருந்து நீங்கி எஞ்ஞான்றும் குன்றாத இன்ப நிலையில் இருக்குமாறு துணை புரிகின்றமை விளங்க, “இன்புறு நிலையில் ஏற்றிய துணையே” எனவும், என் உயிர்க்குயிராய் நின்று நல்லன தீயன காட்டி உய்வித்தலின், “என் உயிர் நாதனே” எனவும் பரவுகின்றார். பொன்னால் அழகுறச் செய்யப்பட்ட மாலை ஒன்றைத் தமக்கு அணிந்து சிறப்பித்தமை தோன்ற, “என்னைப் பொன்புனை மாலை புனைந்த ஓர் பதியே” என வுரைக்கின்றார். பொன்புனை மாலை - பொன் மாலை. வடலூர் வள்ளலார்க்கு இறைவன் பொன் மாலை புனைந்த வரலாறு தெரிந்திலது.      இதனால், இறைவன் வடலூர் வள்ளலார்க்குப் பொன் மாலை புனைந்த வரலாறு தெரிவித்தவாறாம்.

     (15)