3887. சத்திய பதியே சத்திய நிதியே
சத்திய ஞானமே வேத
நித்திய நிலையே நித்திய நிறைவே
நித்திய வாழ்வருள் நெறியே
சித்திஇன் புருவே சித்தியின் கருவே
சித்தியிற் சித்தியே எனது
புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
பொதுநடம் புரிகின்ற பொருளே.
உரை: சத்துப் பொருளாகிய தலைவனே! சத்தியச் செல்வமே! சத்தாகிய ஞானப் பொருளே! வேதம் கூறுகின்ற நித்திய ஞான நிலையே! நித்திய தன்மைகள் நிறைந்த பூரணனே! நிலைத்த ஞான வாழ்வையருளுகின்ற நெறியின் பயனே! சித்திளால் உண்டாகின்ற இன்பத்தின் வடிவமே! எல்லாச் சித்திகட்கும் காரணமாகிய முதற்பொருளே! சித்திகள் எல்லாவற்றுக்கும் உள்ளுறு சித்தியாய்த் திகழ்கின்ற சித்தி வடிவமே! என்னுடைய புத்திக்குத் தெளிவு நல்குகின்ற தெளிவே! எனக்குப் புதிதாகிய ஞானவமுதம் தந்து அம்பலத்தில் ஆடல் புரிகின்ற பரம்பொருளே, வணக்கம். எ.று.
சத்தாகிய பதி என்றற்கு, “சத்திய பதி” என்றும், சத்தாய்ச் செல்வமாய் நலம் பயப்பது பற்றி, “சத்திய நிதியே” என்றும், உண்மை ஞானப் பொருள் என்றற்கு, “சத்திய ஞானமே” என்றும் இயம்புகின்றார். பொய்ப் பொருளை விலக்கி நிலையாய மெய்ப்பொருளை எடுத்தோதும் இயல்பினவாகலின், “வேத நித்திய நிலையே” எனவும், அழிவில்லாதனவாகிய தன்மைகள் அனைத்தும் குறைவற நிறைந்த பூரணமாதல் பற்றி, “நித்திய நிறைவே” எனவும் சொல்லுகின்றார். அழியாப் பெருவாழ்வு எய்துதற் குரிய ஞான நெறியை மேற்கொள்வோர் அடையும் பயனாதலால் சுகத்தை, “நித்திய வாழ்வருள் நெறியே” எனவும் உரைக்கின்றார். பல்வகைச் சித்திகளையும் செய்ய வல்லார் பெறும் இன்ப வடிவாய் அச்சித்திகள் எல்லாவற்றிற்கும் மூலகாரணமாய் இருப்பது பற்றிச் சிவனை, “சித்தியின் புருவே சித்தியின் கருவே” எனவும், சித்திகள் பலவற்றிற்கும் உள்ளுறு சித்தியாய்த் திகழ்வது விளங்க, “சித்தியிற் சித்தியே” எனவும் தெரிவிக்கின்றார். புத்தி தத்துவத்திற்குத் தெளிவு நல்கி நல்ஞானமாகிய அமுதினைத் தந்து சிறப்பிப்பது பற்றி, “புத்தியின் தெளிவே” என்றும், “புத்தமுது அளித்துப் பொது நடம் புரிகின்ற பொருளே” என்றும் புகல்கின்றார்.
இதனால், புத்தி தத்துவத்திற்குத் தெளிவும் இன்பமும் சிவ பரம்பொருள் அருளும் திறம் செப்பியவாறாம். (16)
|