3888. சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
சிவபத அனுபவச் சிவமே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
மதிநிறை அமுதநல் வாய்ப்பே
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
சாமியே தந்தையே தாயே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
உரை: அம்பலத்தில் அருள் நடம் புரிகின்ற பரம்பொருளே! ஞானக் கண்ணுடையார் காணுமாறு ஒளிர்கின்ற பரம்பொருளே! அப்பரவெளியில் விளங்குகின்ற பதியாகிய சிவமே! சிவ பதத்தில் அனுபவிக்கப்படுகின்ற சிவபோகமே! பல்வேறு மதங்களின் கொள்கை வேறுபாடுகளை நீக்கி, உணர்கின்ற உணர்வால் நன்கு மதிக்கப் படுகின்ற ஞானப் பொருளே! துவாதசாந்தத்தில் திகழும் சந்திரனிடத்து நிறைந்தொழுகும் அமுதமாகிய நற்பேற்றின் உருவே! சத்தாகிய திருநெறியை மேற்கொள்வார்க்கு ஒப்பற்ற நெறியாய் அதனைக் கடைபோகச் சென்று பயன் எய்துதற்குத் துணை செய்பவனே! எனக்குச் சாமியும் தந்தையும் தாயுமானவனே! பெருமை வாய்ந்த மேன்மைப் பொருளே! சென்றடைதற் கரிதாகிய உயர்தரச் செல்வமே, வணக்கம். எ.று.
சிதம் - ஞானம் ஞான நாட்ட முடையார் தத்துவங்களைக் கடந்து நோக்க விளங்கும் பரவெளியை, “சிதத்தொளிர் பரம்” என்றும், அப்பரவெளியின்கண் திகழ்கின்ற சிவமாகிய பதிப்பொருளை, “பரத்து ஒளிர்பதியே” என்றும், அப்பதிப் பொருள் நிலவும் இடம் சிவபதமாதலால், அப்பதத்தின்கண் அனுபவிக்கப்படும் சிவானுபவத்தை, “சிவபத அனுபவச் சிவமே” என்றும் இயம்புகின்றார். உலகில் நிலவுகின்ற மதங்கள் பலவாய், ஒன்றினொன்று உயர்வு தாழ்வு கற்பித்து உண்மையறிவுக்குத் தடை செய்தலால், அவற்றால் விளையும் குற்றத்தை அறிந்து நீக்குதற்குரிய நல்லறி வுடையோர் தமது அறிவின் நன்மையால் தெளிந்து உணரப்படும் ஞானப் பொருளாதல் பற்றிச் சிவனை, “மதத் தடை தவிர்த்த மதி மதி மதியே” என்று மகிழ்ந்து உரைக்கின்றார். மதத் தடை தவிர்த்த மதி - மதங்களால் விளையும் தடைகளை உண்மை யறிந்து போக்கும் மதி நுட்பமுடைய நல்லறிவுகள். மதி நிறை அமுதம் ஆஞ்ஞையாகிய ஆதாரத்திற்கு மேல் பன்னிரண்டு அங்குல உயரத்தில் காட்சிப் படுகின்ற அமுத சந்திரனை “மதி” எனவும், அதனிடத்தே நிறைந்து ஒழுகுகின்ற ஞானமாகிய அமுதத்தை உண்டு மகிழும் யோக வாய்ப்பினை, “மதி நிறை அமுத நல்வாய்ப்பே” என ஓதுகின்றார். சதத் திருநெறி - சத்தாகிய ஞானம் நல்கும் சிவநெறி. சிவநெறி மேற்கொண்டு ஒழுகுவார்க்கு அந்நெறியின் சிவபோகப் பயனைத் துய்த்தற்குத் துணை செய்தலால், “சதத் திருநெறியே தனி நெறித் துணையே” என்று சாற்றுகின்றார். சாமி - தலைவன். அற்புதம் என்பது புதம் என வந்தது. சிவ தத்துவ சிவலோகம் போகப் பேற்றுக்குரிய இடமாய் ஆன்மாக்கள் எளிதிற் புகுதற் கரியதாய் உள்ள உயர்நிலையாதலின், சிவபோக நிலையத்தை, “புகற்கு அருந் தரமே” எனக் குறிக்கிறார்.
இதனால், சிவத்தின் திருநெறியையும் அதற்குச் சிவன் துணை யாவதையும் எடுத்தோதியவாறாம் (17)
|