3889. கலைவளர் கலையே கலையினுட் கலையே
கலைஎலாம் தரும்ஒரு கருவே
நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
நித்திய வானமே ஞான
மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
மாபலம் தருகின்ற வாழ்வே
புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
பொதுநடம் புரிகின்ற பொருளே.
உரை: அம்பலத்தில் அருள் நடம் புரிகின்ற சிவ பரம்பொருளே! உலகில் நிலவும் கலைகள் எல்லாவற்றினும் மேன் மேலும் வளர்த்தருளும் கலை யுருவானவனே! கலைகள் எல்லாவற்றுக்கும் உள்ளுறு கலை யுருவாய் ஒளிர்பவனே! கலைகள் எல்லாவற்றையும் உயிர்கட்குத் தந்தருளும் ஒப்பற்ற கருப் பொருளே! நிலையாய பூதங்களின் பரமாணுக்களாகிய கருவாய் விளங்கும் நித்திய வானமாகியவனே! ஞானமாகிய மலையிடத்தே விளைகின்ற மருந்தாயும், மருந்தினது பயனாயும், அப்பயனால் விளைகின்ற ஞான பலத்தைத் தருகின்ற பெருவாழ்வாகப் பிறங்குபவனே புலை, களவு முதலிய குற்றங்களை நீக்கி என்னையும் ஒருபொருள் எனக் கருதி ஆண்ட பெருமானே, வணக்கம். எ.று.
கல்வி ஞானமுடையார் கண்டும், செய்தும், அறிந்தும், காட்டும் துறைகள் பலவும் கலை எனப்படும். அக்கலைகளைக் கண்டு அழகு செய்து காண்பார் கருத்தைக் கவரும் நிலையில் உருவாக்கும் துறை, “கலைவளர் கலைத்துறை”யாகும்.. அக்கலைகளை வளர்த்து உருவாக்கி உலகிற்குப் பயன்படச் செய்தலின் இறைவனை, “கலைவளர் கலையே”, “கலையினுட் கலையே”, “கலை எலாம் தரும் ஒரு கருவே” எனக் கட்டுரைக்கின்றார். இக்கருத்தையே திருநாவுக்கரசர், “கலையாகி கலைஞானம் தானேயாகி எண்ணாகி எண்ணுக்குள் ஓர் எழுத்துமாகி எழும் சுடராய் எம்மடிகள் நின்றவாறே” என்று உரைப்பது காண்க. “கலையவன் மறையவன்” (சிரபுரம்) என்று ஞானசம்பந்தரும் உரைப்பது காண்க. நிலைவளர் கரு என்பது நிலையாய பூதங்களின் பரமாணுக்கள். அவற்றுக்குள் கருவாய் நின்று வானத்துள் உருவாய்ப் பூதங்களாய்த் தோன்றுவித்தலின், “கருவுட் கருவென வயங்கும் நித்திய வானமே” என்று உரைக்கின்றார். “கருவளர் வானம்” (பரிபாடல் : 2 : 5) என்பதற்கு, பூதங்களின் பரமாணுக்கள் வளர்கின்ற வானமாகிய முதற் பூதம் என்று பரிமேலழகர் உரை கூறுவது காண்க. பூதங்களின் கருவாய் அக்கருவுக்குள் கருவாய் நின்று அவை விரிந்து பரந்து உலகமாதற்கு ஏதுவாதல் பற்றிச் சிதாகாசமாகிய ஞான வானத்தை, “கருவுட் கருவென வயங்கும் நித்திய வானமே” என்று வள்ளற் பெருமான் சிவ பரம்பொருளை விளக்குகின்றார். நித்திய வானத்தில் விளங்கும் பூதம் முதற் காரண கருப்பொருளாதலின் கருவினை, “நிலைவளர் கருவுட் கரு” என்று சிறப்பிக்கின்றார். ஞானத்து உச்சியில் பிறவி நோய் தீர்க்கும் மருந்தாய் விளங்குவது பற்றிச் சிவனை “ஞான மலைவளர் மருந்து” என்றும், மருந்துண்பார் நோய் நீங்கித் தேகபலம் பெறுவது போல ஞான மருந்துண்டார் அதன் பயனாகிய சிவஞான பலம் பெறுதலால், “மருந்துறு பலனே மாபலம் தருகின்ற வாழ்வே” என்று ஏத்துகின்றார். புலை, களவு முதலிய குற்றங்கள் தம்பால் நிகழாதபடி இறைவன் ஆண்டு கொண்டமை விளங்க, “புலை தவிர்த்து எனையும் பொருளெனக் கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே” என்று போற்றுகின்றார்.
இதனால், கலை யுருவாய்ப் பூத காரணமாகிய கருப் பொருட்கள் தோன்றி வளரும் வானமாய் இறைவன் விளங்குவது எடுத்துரைத்தவாறாம். (18)
|