3891. காரண அருவே காரிய உருவே
காரண காரியம் காட்டி
ஆரண முடியும் ஆகம முடியும்
அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே
நாரண தலமே நாரண வலமே
நாரணா காரத்தின் ஞாங்கர்ப்
பூரண ஒளிசெய் பூரண சிவமே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
உரை: அம்பலத்தில் ஆடல் புரிகின்ற சிவ பரம்பொருளே! பொருள்கட் கெல்லாம் காரணமாய் விளங்கும் அருவப் பொருளே! காரியப் பொருட்களுக்கு உருவளிக்கும் முதல்வனே! எல்லாவற்றிற்கும் காரண காரியங்களை யுணர்வித்து வேத முடிவிலும் ஆகம முடிவிலும் இருந்து விளங்கும் அற்புத ஒளியே! நாரண உலகமாய் அவ்வுலகிற் பெறலாகும் ஞான வன்மையாய் நாரண உருவங்களுக்கு மேலாய் நிறைந்த ஒளி செய்கின்ற பரிபூரண சிவபெருமானே, வணக்கம். எ.று.
உருவாய்க் காணப்படுகின்ற பொருள் அனைத்திற்கும் ஏதுவாகிய காரணம் அருவமாதலின், “காரண அருவே காரிய உருவே” என்று கூறுகின்றார். காணப்படும் நீராகிய காரியப் பொருட்குக் காரணமாகிய நீர்க் காற்று, நெருப்புக் காற்று இரண்டும் அருவமாதலின், “காரண அருவே காரிய உருவே” என வள்ளற் பெருமான் கூறுவது மெய்ம்மையாதல் காண்க. உலகிலுள்ள காரியங்கள் அனைத்திற்கும் காரணம் உண்டென்பது அறிவாராய்ச்சியாளர் அறிந்ததாகலின் அதனை, “காரண காரியம் காட்டி” எனவும், வேத முடியிலும் ஆகம முடியிலும் ஞானிகளால் உளதெனப் புணர்ந்துரைக்கப்படுதலின், “ஆரண முடியும் ஆகம முடியும் அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே” எனவும் இயம்புகின்றார். நாரண தலம் - நாரணனை வழிபடுவோர் சென்றடையும் உலகம். அவ்வுலகினை யடைந்தோர் பெறும் ஞான நலத்தை, “நாரண வரமே” எனவும், அவ்வுலகில் அவர்கள் பெறும் நாரண வுருவை “நாரணாகாரம்” எனவும் நவில்கின்றார். நாரணர்கள் மேற்கொண் டுறையும் நாரண ரூபத்தை “நாரணாகாரம்” என்று தெரிவிக்கின்றார். நாரண பதத்துக்கு மேலதாகலின் சிவ பதத்தை “நாரணா காரத்தின் ஞாங்கர்ப் பூரண ஒளி செய் பூரண சிவமே” என்று புகல்கின்றார்
.
இதனால், வேதாகமங்களின் முடியிலும் நாரண உலகத்தின் மேலும் சிவம் காட்சிப் படுமாறு தெரிவித்தவாறாம். (20)
|