3893. காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
ஏகா நினக்கடிமை ஏற்று.
உரை: தத்துவ நெறியின் உச்சியில் நின்று நடிக்கும் ஒருவனாகிய சிவனே! யான் நினக்கு அடியவனாகிய தன்மையை மேற்கொண்டு, திருவருள் ஞானம் பெற்ற காலையில் நின்னை எனது ஞான நாட்டத்தால் கண்டு கொண்டு, சன்மார்க்க நெறியிலே நின்று கொண்டு இன்பம் பெருகுகின்றேன்; அதன் மேலும் இந்நிலவுலகில் பிறப்புக்கு ஏதுவாகிய சாகாமை என்னும் வரமும் பெற்றுக் கொண்டேன்; இனி ஒன்றாலும் எனக்குக் குறையில்லை. எ.று.
நிலம் முதல் சிவம் ஈறாக வுள்ள தத்துவம் முப்பத்தாறுக்கும் அப்பாலதாகிய தத்துவாதீத வெளியில் தான் ஒருவனாய் நின்று சிவபெருமான் திருக்கூத்தாடுகின்றானாதலால் அவனை, “தத்துவத்தின் மேல் நடிக்கும் ஏகா” என்று துதிக்கின்றார். ஏகன் - ஒருவன். காலை என்பது அருள் ஞானம் பெற்ற காலத்தின் மேற்று. ஞான நாட்டம் பெற்றாலன்றிச் சிவனைக் காண்டல் இல்லையாதலால், “காலையிலே நின்றன்னைக் கண்டு கொண்டேன்” என்று கூறுகின்றார். சன்மார்க்கச் சாலை - சன்மார்க்கமாகிய பெருவெளி. ஞானம் பெற்ற விடத்துச் சன்மார்க்க நெறியால் இன்பம் பெறுதல் இயல்பாதலால், “சன்மார்க்கச் சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்” என்றும், சன்மார்க்க நெறியின் பயன் உலகில் மீளப் பிறவாப் பெருநிலைப் பேறாதலின், “ஞாலமிசைச் சாகா வரம் பெற்றேன்” என்றும் இசைக்கின்றார்.
இதனால், சன்மார்க்க நெறி நின்று சாகா வரம் பெற்ற இயல்பு எடுத்துரைத்தவாறாம். (2)
|