3895.

     கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
     பிள்ளைஎன எற்குப் பெயர்இட்டாய் - தெள்ளமுதம்
     தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
     எந்தாய் கருணை இது.

உரை:

     எந்தையே! எனக்கு அளவு கடந்த இன்பத்தைக் கொடுத்தருளினாய்; அன்றியும் நினக்கு என்னைச் செல்வப் பிள்ளை, என்று பெயரும் தந்தருளினாய்; அதன் மேல் ஞானமாகிய தெளிந்த அமுதத்தையும் தந்தருளினாய்; அதனோடு சமரச சன்மார்க்க சங்கத்திடையே என்னை இருக்க வைத்தாய்; இது நின் கருணைத் திறமாகும். எ.று.

     வரையறையின்றி வாரி வழங்குதலைக் “கொள்ளை என இன்பம் கொடுத்தாய்” என்று கூறுகின்றார். சிவஞானப் பேற்றால் தாம் சிவனுக்கு அன்புடைய செல்வப் பிள்ளை எனும் சிறப்புற்றமை தெரிவித்தற்கு, “நினது செல்வப் பிள்ளை என எற்குப் பெயர் இட்டாய்” என்று செப்புகின்றார். ஞானமருளிய இயல்பைத் “தெள்ளமுதம் தந்தாய்” எனவும், தந்த ஞானத்தை மறவாமை பொருட்டுச் சமரச சன்மார்க்க சங்கத்தில் இருக்க வைத்தான் என்பது விளங்க, “சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய்” எனவும், இச்செயல் இறைவன் திருவருட் செயலாம் என்பது தோன்ற, “எந்தாய் கருணை யிது” எனவும் இசைக்கின்றார். இது என்பது இன்பம் கொடுத்தாய், பெயரிட்டாய் அமுதம் தந்தாய், சன்மார்க்க சங்கத்தே வைத்தாய் என்பவற்றோடு தனித்தனிச் சென்று சேரும்.

     இதனால், இறைவனுடைய கருணைச் செயல்களை விளக்கியவாறாம்.

     (4)