3896. கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உணடேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
அழியாச்சிற் றம்பலத்தே யான்.
உரை: ஆ! ஆ! எக்காலத்தும் கெடுதல் இல்லாத திருச்சிற்றம்பலத்தை அடைந்த யான் கூத்தப் பெருமானைக் கண்ணாரக் கண்டு களித்தேன்; அவனது கருணையாகிய ஞான வமுதத்தை நிறைய உண்டேன்; அதனால் ஞான நெறியில் உயர்நிலை எய்தி மேலும் ஓங்குகின்றேன்; அன்றியும் அழிவில்லாத சிவஞான இன்ப வுருவம் பெற்றுக் கொண்டேன். எ.று.
திருச்சிற்றம்பலத்தின் நிலையாய தன்மையை எஞ்ஞான்றும் அழியாச் சிற்றம்பலம் என்று புகழ்கின்றார். அம்பலத்தின்கண் எழுந்தருளும் பெருமானைக் கண்ட அனுபவத்தை, “கண்டேன் களித்தேன்” எனவும், ஆங்கு தான் பெற்ற ஞான இன்பத்தை, “கருணைத் திருவமுதம் உண்டேன்” எனவும், அதனால் ஞான நெறியில் உயர்ந்த இயல்பினை, “உயர்நிலை மேல் ஓங்குகின்றேன்” எனவும், அது காரணமாக, தான் சிவானந்த ஞான வடிவம் பெற்ற திறத்தை, “அழியாத் திருவுருவம் கொண்டேன்” எனவும் கூறுகின்றார்.
இதனால், திருச்சிற்றம்பல தரிசனம் பெற்ற அனுபவத்தை வடலூர் வள்ளல் சிறப்பித் தோதியவாறாம். (5)
|