3897. பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
போர்த்தேன்என் உள்ளம்எலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
நாடுகின்றேன் சிற்சபையை நான்.
உரை: ஞான சபையின்கண் பெறுதற்குரிய திருவருள் ஞானத்தை நயந்து பெற்ற நான் அப்பேரருள் சபையை அடைந்து கண்ணாரப் பார்த்தேன்; மெய்யாற் பணிந்தேன்; வாயால் துதித்தேன்; உடம்பெல்லாம் புளகம் கொண்டு உள்ளமெல்லாம் பூரித்தேன்; இறைவன் திருப்பெயரை ஓசை மிக ஓதி அங்கே நின்று ஆடுகின்றேன்; அவன் புகழைப் பாடுகின்றேன்; அவன்பால் உண்டாகிய அன்பே உருவாகினேன். எ.று.
பணிதல் - உடல் தரையில் பொருந்த வீழ்ந்து வணங்குதல். பழிச்சுதல் - அன்பால் துதித்தல். புளகம் போர்த்தல் - தேக முற்றும் மயிர்க் கூச்செறிதல். உள்ளம் பூரித்தலாவது இன்ப மிகுதியால் தடித்து வீங்குதல். ஆர்த்தல் - ஆரவாரித்தல். மெய் மறந்து அன்புருவாய் நிற்றலை அன்புருவானேன் என்று விளக்குகின்றார். திருவருள் ஞான நிலையமாதலின் அதனைப் பெறுமிடமாகிய ஞான சபையை, “அருளை சிற்சபையை நான் நாடுகின்றேன்” என வுரைக்கின்றார்.
இதனால், ஞான சபையைத் தரிசித்து ஞானானந்தம் எய்திய திறத்தை வடலூர் வள்ளல் தெரிவித்தவாறாம். (6)
|