3898. எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
குற்றம் பலபொறுத்துக் கொண்டு.
உரை: அடியேன் செய்கின்ற குற்றங்கள் பலவற்றையும் பொறுத்துக் கொண்டு அன்பர்கள் அன்புடன் வந்து வணங்குகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் திருநடம் புரிகின்ற சிவபெருமான், எண்ணுகின்ற நான் எண்ணியவற்றை யெல்லாம் எய்தத் தருகின்றதோடு நான் உண்பனவற்றை மேன்மேலும் உண்ணுமாறு உண்பிக்கின்றான்; அவன் திருவருளை என்னென்பது. எ.று.
கணந் தோறும் மாறுகின்ற முக்குண வயத்தால் குற்றம் புரிவது எனக்கு இயல்பாவதை யறிந்து, யான் செய்கின்ற குற்றங்கள் அனைத்தையும் சிற்றம்பலக் கூத்தப்பெருமான் பொறுத்து அருளுகின்றான் என்பாராய், “என் குற்றம் பலவற்றையும் பொறுத்துக் கொண்டு சிற்றம்பலத்தே திருநடம் செய்கின்றான்” என்று கூறுகின்றார். நாள்தோறும் அன்பர்கள் வந்து வணங்கும் சிறப்புடைமை பற்றி, “நண்ணு திருச்சிற்றம்பலம்” என நவில்கின்றார். கூத்தாடும் பெருமானாயினும் யான் எண்ணியவற்றை எண்ணியாங்குத் தந்தருளுவதோடு யான் நுகர்தற் குரியவற்றையும் மேன் மேலும் நுகர்ந்து மகிழுமாறு நல்கி நுகர்விக்கின்றான் என்பாராய், “எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் உண்ணுகின்றேன் உண்ண உண்ண ஊட்டுகின்றான்” என்று இயம்புகின்றார்.
இதனால், அம்பலக் கூத்தனாகிய இறைவன் எண்ணியவை எண்ணியாங்கு யான் பெறுவித்து உண்பனவற்றைத் தடையின்றி உண்டு மகிழுமாறு உதவுகின்றமை தெரிவித்தவாறாம். (7)
|