3899.

     கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
     கண்டான் களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
     நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
     வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.

உரை:

     பழையனவாகிய நால்வகை வேதங்களும் சிவாகமங்களும் போற்றுகின்ற திருச்சிற்றம்பலத்தில் ஞான மயமாகிய சிவபெருமான் என்பால் மனமுவந்து என்னை அடிமை கொண்டருளியதோடு என்பால் உளவாகும் பிழைகளில் ஒன்றையும் மனத்திற் கொள்ளாராய், தன்னுடைய அருட் பார்வையால் என்னைப் பார்த்து மகிழ்ந்து என் உயிரோடு கலந்து கொண்டான். எ.று.

     காலத்தால் மிகவும் பழமையான இருக்கு முதலிய வேதங்கள் நான்கினையும், காமிகம் முதலாகிய சிவாகமங்கள் இருபத்தெட்டினையும் ஓதி யுணர்ந்த பெருமக்கள் நாள்தோறும் தரிசித்து வணங்குதற்கு விரும்பும் சிற்றம்பலமாதலின், “பண்டாய நான்மறையும் ஆகமமும் நாடும் திருப்பொது” என்றும், அதனை ஞானாகாயம் என்பது பற்றி அதன்கண் விளங்கும் சிவனை, “வான் மயத்தான்” என்றும் கூறுகின்றார். என்னுடைய குணஞ் செயல்களை விரும்பி இறைவன் என்னை அடியவனாகக் கொண்டான் என்பாராய், “என்னை மகிழ்ந்து அடிமை கொண்டான்” என்றும், யான் செய்யும் பிழைகளைப் பொருளாகக் கருதாமல் அருளுகின்றான் என்பாராய், “குறியான் பிழை ஒன்றும்” என்றும், என்னைத் தனது அருட் கண்ணால் கண்டு மகிழ்ந்து என் உயிர்க்குயிராய்க் கலந்து கொண்டான் என்பாராய், “கண்டான் களித்தான் கலந்திருந்தான்” என்றும் கூறுகின்றார்.

     இதனால், இறைவன் தம்மை அடிமை கொண்டு தன்னுள் உயிர்க் குயிராய்க் கலந்து கொண்டமை தெரிவித்தவாறாம்.

     (8)