3900. கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
உண்டேன் அழியா உரம் பெற்றேன் - பண்டே
எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
தனைஉவந்து கொண்டான் தனை.
உரை: உயர்ந்த ஞான சபையின்கண் மகிழ்ச்சியோடு எழுந்தருளுபவனும், முன்னமே என்பால் அன்புற்று உரியவனாக ஏன்று கொண்ட கூத்தப் பெருமானைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்து அவனுடைய திருவருளாகிய அமுதத்தை உண்டு கெடாத ஞான வன்மை பெற்றேன். எ.று.
எழில் - உயர்ச்சி. ஞான மன்றம் - ஞான சபை. ஞான சபைக்கு நாயகனாக விளங்குவதால், “ஞான மன்றம் தனை உவந்து கொண்டான்” எனவும், இளமைப் பருவத்தேயே தமது உள்ளத்தில் மகிழ்வோடு தன்னை ஏன்று கொண்டான் என்பாராய், “பண்டே எனை உவந்து கொண்டான்” எனவும் இயம்புகின்றார். இறைவனது காட்சி தமக்கு மகிழ்வு தந்தது போல அப்பெருமானுடைய திருவருள் தமது மனத்திற்குக் கெடாத திண்மையை அளித்தது என்றற்கு, “கருணைத் திருவமுதம் உண்டேன் அழியா உரம் பெற்றேன்” என்று கூறுகின்றார்.
இதனால், இறைவனுடைய திருவருட் காட்சியால் சலியா மனத் திட்பம் பெற்றது கூறியவாறாம். (9)
|