3901.

     தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
     மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
     குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
     மணவாளன் பாத மலர்.

உரை:

     சான்றோரால் புகழ்ந்து ஓதப்படுகின்ற எண்வகைக் குணங்களை யுடையவனும், தில்லையம்பலத்தில் அருட் கூத்தாடுபவனும், உமையம்மையை மணந்து கொண்ட கணவனுமாகிய சிவனுடைய மலர் போன்ற இரு திருவடிகளும் எனக்குத் தந்தையும், தாயும், சற்குருவாகிய ஞான முதல்வனும், இன்பம் நுகர்விக்கும் பொருளுமாவான். எ.று.

     சிவாகமங்கள் ஓதுகின்ற எண்வகைக் குணங்களையும் கொண்டு விளங்குபவனாதலால் சிவனை “ஓது குணவாளன்” என்றும், தில்லையம்பலத்தில் ஞானக் கூத்தாடுவது பற்றி, “தில்லை அருட் கூத்தன்” என்றும், உமையம்மையை உலகமறியத் திருமணத்தால் மணந்து கொண்டவனாதலால், “உமையாள் மணவாளன்” என்றும் மகிழ்ந்துரைக்கின்றார். அவருடைய இரண்டு திருவடிகளும் தாமரை போல் அழகும் ஒளியும் உடையவையாதலின், “பாத மலர்” என்று புகழ்கின்றார். தாதை - தந்தை. சற்குருவாம் மேதை, உண்மை ஞான வுருவாகிய மேதக்க ஞானத் திருவுருவினன் என்றும், அவருடைய திருவடி ஞானம் பேரின்பம் விளைவித்தலின், “இன்ப விளைவுமாம்” என்றும் இசைக்கின்றார்.

     இதனால், தில்லைக் கூத்தப் பெருமானுடைய திருவடியின் சிறப்பு எடுத்தோதியவாறாம். இனி வரும் இரண்டு பாட்டுக்களுக்கும் இதுவே கருத்தாக உரைத்துக் கொள்க.

     (10)