3902. திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
மாப்பிள்ளை பாத மலர்.
உரை: பெரிய மேரு மலையின் தெய்வ மகளாகிய எங்களுடைய சிவகாமவல்லி எனும் அன்னைக்கு மாப்பிள்ளையாகிய சிவனுடைய திருவடித் தாமரைகள்தாம் எனக்குச் செல்வமும் தெய்வமும் தெளிந்த அமுத மயமான ஞானத்தை உபதேசிக்கும் குருவும் என்னைக் காத்தருளுகின்ற அருளரசுமாகும். எ.று.
மேரு மலையினும் உயர்ந்த மலை உலகில் வேறே இல்லாமையால் அதனைப் “பருவரை” என்கின்றார். அந்த மலைக்குரிய பருவத ராசன் மகளாய்ப் பிறந்து வளர்ந்தமை பற்றி உமாதேவியை, “பருவரையின் தேப்பிள்ளை” என்று சிறப்பிக்கின்றார். தேப்பிள்ளை - தெய்வ மகள்; இனிய மகள் என்றாலும் பொருந்தும், உமாதேவிக்குச் சிவகாமவல்லி என்னும் பெயருண்டு. சிவனையே காதலித்தமையால் அவளுக்குச் சிவகாமவல்லி என்று பெயராயிற்று. மாப்பிள்ளை - கணவன். உலகியல் இன்ப வாழ்வுக்குச் செல்வம் இன்றியமையாதாகையால், “பாத மலர்த் திருவாம்” என்றும், நாளும் வணங்குதற்குரிய தெய்வமாதல் விளங்க, “தெய்வமாம்” என்றும், தெளிந்த அமுத மயமாய் அறிவுக்கு ஞானப் பொருளாய் விளங்குவதால், “தெள்ளமுத ஞானக் குருவாய்” என்றும், துன்பம் வந்து சுடச்சுடத் தாக்குமிடத்து அருளாற்றல் தந்து ஆதரித்தலின் “எனைக் காக்கும் கோவாம்” என்றும் கூறுகின்றார். (11)
|