3903. என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
மாலைஇட்டான் பாத மலர்.
உரை: வெற்றி நிலைபெற்ற குடியின்கண் சேல் மீனை எழுதிய பாண்டி வேந்தன் இன்ப வாழ்வு பெறும் பொருட்டுச் சிவகாம சுந்தரியாகிய அங்கயற் கண்ணியை மாலையிட்டு மணந்து கொண்ட சொக்கநாதப் பெருமானுடைய மலர் போன்ற திருவடி யிரண்டும் எனக்கு நல்லறிவாயும், என் அறிவுக்குள் சுரக்கின்ற இன்பமாகவும், என் அறிவினுள் விளங்கும் உண்மையறிவாகவும், உண்மைத் தன்மைக்குரிய தனிநிலையாகவும் விளங்குகின்றன. எ.று.
பாண்டி வேந்தனுக்கு மீன் எழுதிய கொடி யுரியதாகலின் பாண்டியனை, “மன்னு கொடிச் சேலை யிட்டான்” என்று சிறப்பிக்கின்றார். இப்பாண்டி வேந்தனை மலையத்துவசன் என்றும் கூறுவர். சிவகாம சுந்தரியை “அங்கயற் கண்ணி” என்றும், “மீனாட்சி என்றும் புராணங்கள் கூறுகின்றன. மீனாட்சியைத் திருமணம் செய்து கொள்ளுமிடத்து மணமாலை சூட்டினானாதலால், “சிவகாம சுந்தரியை மாலை யிட்டான்” என்று புகழ்கின்றார். சிவனுடைய திருவடியே தமக்கு இயற்கை அறிவாகும் என்றற்கு, “என்னறிவாம்” என்றும், அறிவினுள் இன்பம் பிறத்தலால் “என்னறிவின் இன்பமாம்” என்றும், அறிவினால் அறிவது அறியுமிடத்து மயக்கம் தெளிய உள் நின்று விளங்கும் உண்மை யறிவை, “என்னறிவின் தன்னறிவாம்” என்றும், மெய்ம்மைத் தன்மைக்கு ஒப்பற்ற தனிநிலையமாக இறைவன் திருவடி விளங்குவது பற்றி, “உண்மைத் தனிநிலையாம்” என்றும் இயம்புகின்றார். (12)
|