41. பரசிவ நிலை

    அஃதாவது, சுத்த மாயா மண்டலத்துக்கு, அதீதமாய், சிற்பர வியோமமாகிய பரமண்டலத்தில் விளங்குகின்ற சிவ பரம்பொருளின் குணஞ் செயல்களை விரித்தோதிப் பரவுவதாம். பரவியோமம் பராகாசம் எனவும் ஞான நூல்களால் குறிக்கப்படுவது. இதனை ஞானாகாசம் எனவும், ஞான சபை எனவும் சான்றோர்கள் புகழ்ந்தோதுவதால் பராகாசப் பரசிவத்தைச் “சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம்” எனச் சிறப்பித்தோதுகின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3904.

     அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
          அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
     பொருட்சாரும் மறைகள்எலாம் போற்றுகின்ற தெய்வம்
          போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
     இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
          எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
     தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
          சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

உரை:

     ஞான சபையில் விளங்குகின்ற தெய்வமாகிய சிவமே திருவருள் ஞானமாகிய சோதியை யுடையதும், என்னை அருள் நெறிக்கண் நிறுத்தி ஆண்டு கொண்டதும், தில்லையம்பலத்தே ஆடு முகத்தால் உயிர்கட்கு இன்பத்தைத் தருவதும், பொருள் நிறைந்த வேதங்கள் யாவும் போற்றுகின்றதும், ஞான யோக நெறியின் முடிவிலும் தத்துவங்களின் உச்சியில் உயர்ந்து விளங்கும் நாத தத்துவத்தின் முடிவில் விளங்குவதும், அஞ்ஞானமாகிய இருளால் வரும் துன்பத்தைப் போக்கி இன்ப ஒளியினைத் தந்தருளுவதும், நான் எண்ணியவற்றை எண்ணியவாறு எய்துவிப்பதும் என்னுடைய தெளிந்த பொருள் நிறைந்த பாடல்களை ஏற்று மகிழ்ந்து என்னைச் சிவமாக்குவதும் ஆகும். எ.று.

     திருவருள் ஞானத்தையே தனக்குத் திருவுருவாகக் கொண்ட தெய்வம் என்பாராய், “அருட் சோதித் தெய்வம்” எனவும், உயிர்கட்குத் திருவருள் ஞானம் அருளி ஆளாகக் கொள்கின்ற தெய்வம் என விளக்குதற்கு, “அருட் சோதித் தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்” எனவும் தெரிவிக்கின்றார். அம்பலத்தில் நிகழ்த்துகின்ற திருக்கூத்து ஆன்மாக்கட்கு இன்பமாகிய உறுதிப் பொருளை நல்குவதென்பது பற்றி, “அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்” என ஓதுகின்றார்.மெய்யுணர்வுக்குரிய மெய்ப்பொருளனைத்தும் தன்னகத்தே கொண்ட வேதங்களால் துதிக்கப் படுவது பற்றி, “பொருட் சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்” என்றும், ஞான நூல்களை ஓதியும் உணர்ந்தும் ஞான நெறியினின்றும் பெறலாகும் ஞானப் பெரும் பொருளாதலின் சிவனை, “போதாந்தத் தெய்வம்” என்றும், தத்துவ நெறியில் ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் ஆகிய மூன்றிற்கும் உச்சிக் கண்ணதாகிய நாத தத்துவத்தின் அந்தத்தில் பரசிவமாய் விளங்குதலால், “உயர் நாதாந்தத் தெய்வம்” என்றும் விளக்குகின்றார். ஆணவம், மாயை, கன்மம் என்று மூன்றாலும் ஆன்ம ஞானத்தை இருள் படுத்தித் துன்பமுறுவிக்கும் பாசத் தொடர்பை நீக்கி ஞான ஒளி தந்து உய்விக்கும் சிறப்புடைமை பற்றி, “இருட் பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்” என்றும், இருள் நீங்கிய விடத்து எய்துதற்குரிய இன்ப வகையை நான் எண்ணியபடியே எனக்கு எய்துமாறு அருளுகிறது என்பாராய், “எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்” என்றும் உரைக்கின்றார். சிவஞானத்தால் சிவத்தைத் தெளிந்து அது பொருளாகத் தாம் பாடும் பாட்டுக்களை, “தெருட் பாடல்” எனவும், அவற்றை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு மன மொழி மெய் முதலிய கரணங்களைச் சிவ கரணமாக்குவது பற்றி, “தெருட் பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்” எனவும், அது ஞான சபையில் விளங்குகின்ற தெய்வமாகும் என ஆன்மாக்கள் தெருண்டு உய்யும் பொருட்டு என்றற்கு, “சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்” எனவும் தெரிவிக்கின்றார்.

     இதனால், சிவ பரம்பொருளின் பரந்து பட்ட அருட் பண்புகளை விரித்தோதியவாறாம். இக்கருத்தையே இனி வரும் பாட்டுக்களிலும் உரைத்துக் கொள்க.

     (1)