3905. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
உரை: ஞான சபையில் விளங்குகின்ற பரதெய்வமாகிய சிவ பரம்பொருள் எல்லாம் செய்ய வல்லதும், எங்கும் நிறைந்திருப்பதும், என்னுயிரில் ஒன்றாய்க் கலந்து எனக்கு இன்பம் தருவதுமாகிய தெய்வமாம்; இதுவே நல்லார்க்கு நல்லதாய் எல்லாப் பொருட்கும் செயல்கட்கும் நடுவனதாய் நல்லோர் கண்டு பரவும் பொன்னம்பலத்தில் ஆடுகின்ற தெய்வமாகும்; கல்லாதவர் கற்றவர் என்ற வேறுபாடின்றி எல்லார்க்கும் ஒப்ப இன்பம் அருளுவதும், எல்லா வுயிர்கட்கும் நிறைந்த திருவருள் இன்பத்தை நல்குவதாய், ஆன்ம சிற்சத்திக்கு எட்டாத நிலைகள் பலவற்றிலும் சென்று இயலுவதாய் விளங்குகின்ற பரதெய்வமாகும். எ.று.
எல்லா வன்மையும் உடையதாய் எல்லா உலகப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து விளங்குவது பற்றிப் பரசிவத்தை, “எல்லாம் செய்வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம்” எனவும், எல்லா உயிர்களிடத்தும் உயிர்க்குயிராய்க் கலந்து உணர்வு நல்கி இன்பம் பெறுவித்தலால் அதனை, “என்னுயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம்” எனவும் இயம்புகின்றார். நல்லார்க்கு நலமும் தீயவர்க்குத் தீமையும் தந்தியலும் சிறு தெய்வங்களின் வேறாய், எல்லா வுயிர்கட்கும் நீதி வழங்கும் நடுநிலைப் பரம்பொருளாய் நல்லவர்கள் நாளும் கூடி யிருந்து தரிசித்து மகிழ அம்பலத்தில் திருக்கூத்தாடும் சிறப்பியல்பு இனிது விளங்க, “நற்சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம்” என்று போற்றுகின்றார். “கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்” என்று பெரியோர் கூறினும், யாவர்க்கும் நடுவான தெய்வமாதல் பற்றி, கற்றவர் கல்லாதவர் ஆகிய இருதிறத்தார்க்கும் வாழ்க்கை இன்பத்தை நல்கி வாழச் செய்தலின், “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம்” எனவும், உலகியல் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் காரணமாய் நின்று தன்னுடைய கருணையை நினைந்து பரவும் அன்புடைய உயிர்கட்கு அந்தத் திருவருள் இன்பத்தைக் குறைவறத் தந்து நுகர்வித்தலின், “காரணமாம் தெய்வம் அருட் பூரணமாம் தெய்வம்” எனவும் புகழ்கின்றார். ஆன்ம சிற்சத்தியின் எல்லை மாயா மண்டலத்துக்கு அப்பாலுள்ள வெளிகட்குச் செல்லாதாகலின் அவற்றை, “செல்லாத நிலைகள்” என்றும், அவற்றை எல்லாம் கடந்து அப்பாலுக் கப்பாலாய்ச் செல்லுகின்ற சிவத்தின் தன்மை தோன்ற, “செல்லாத நிலைகள் எல்லாம் செல்லுகின்ற தெய்வம்” என்றும் தெரிவிக்கின்றார். (2)
|