3906. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தன்மைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
உரை: ஞான சபையில் ஞானக் கூத்தாடுகின்ற தெய்வம் எதுவோ அதுவே எனக்குத் தாயும் தந்தையுமாய் என்னைத் தாங்கி அருளும் தெய்வமாகும்; அது தனக்கு ஒப்பாக ஒன்றில்லாத தனித்த தலைமை பொருந்திய தெய்வமாகும்; வாயார வாழ்த்தி வணங்குகின்ற நன்மக்களின் மனத்தின்கண் எழுந்தருளுவதும் தாமரை மலர் போன்ற தன்னுடைய திருவடியை என் தலை மேல் வைத்தருளிய பெரிய தெய்வமும் அதுவேயாகும்; பிஞ்சும் காயுமாய் முதிர்தலின்றி எடுத்த எடுப்பிலேயே முற்றவும் கனிந்த பழமாய், என்னுயிரில் கலந்து இனிமை நல்கும் தெய்வமாய், எனக்கு அருட்செல்வமாய், எனது அறிவு அறியுமாறு எல்லாவற்றையும் குறைவறக் காணச் செய்யும் தெய்வமாய் விளங்குவதாகும்; என்னைச் சிறு குழந்தையாகக் கொண்டு அருள் நெறியில் வளர்த்தருளும் மகா தெய்வமும் அதுவேயாகும். எ.று.
உலக உயிர்களைப் படைத்தளித்து வாழ்விக்கும் அருட் செயல் பற்றிச் சிவமாகிய மகாதெய்வத்தை, “தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்” என்றும், அதற்கு ஒப்பதும் மிக்கதுமாகிய தெய்வம் யாதுமில்லாத தனித் தலைமைப் பெரிய தெய்வம் என்றற்கு, “தன்னை நிகரில்லாத தனித் தலைமைத் தெய்வம்” என்றும் கூறுகின்றார். உண்மை அன்புடன் அதனுடைய எண்ணிறந்த நாமங்களைச் சொல்லித் துதிக்கின்ற அன்பர்களுடைய மனத் தாமரையின்கண் மகிழ்ந்து எழுந்தருளும் அதன் மாண்பு விளங்க, “வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்” எனவும், அதனை நினைந்து ஒழுகுவதால் தமக்குத் தெளிந்த அறிவு விளக்கம் எய்த அதன் திருவடியை நினைந்து நினைந்து பராவும் தனிநிலைமை தமக்கு எய்தினமை புலப்பட, “மலரடி என் சென்னி மிசை வைத்த பெருந் தெய்வம்” எனவும் இயம்புகின்றார். நினைக்கும் உள்ளத்தில் நினைக்கும் தோறும் இன்பம் ஊற்றெடுத்து மகிழ்வித்தலின், “காயாது கனியாகிக் கலந்தினிக்கும் தெய்வம்” என்றும், அதனுடைய திருவருளே பெருஞ் செல்வமாய்த் தனக்கு எல்லா நலங்களும் எய்துவிப்பது பற்றி, “கருணை நிதித் தெய்வம்” என்றும், காண்பதற்கரிய நுண்பொருட்கள் பலவற்றையும் முற்றவும் காணச் செய்தலின், “முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்” என்றும் புகழ்கின்றார். உலகியலில் எல்லாக் கனிகளும் தொடக்கத்தில் பிஞ்சாய்க் காயாகிப் பின்னர்க் கனியாய் இன்புறுத்துவது போலின்றி நினைக்கும் நினைவின்கண் முற்றக் கனிந்த இன்பக் கனியாய் இனிமை செய்வது பற்றி, “காயாது கனியாகிக் கலந்தினிக்கும் தெய்வம்” என்று எடுத்துரைக்கின்றார். உலகியற் காட்சிகளும் அவற்றின் உண்மையை யுணர்த்தும் அறிவுப் பொருட்களும் காண்பார்க்குத் தமது உண்மைத் தன்மையைக் குறைவற முற்றுமாய்க் காட்டுதல் இல்லாமையால், “முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்” என மொழிகின்றார். என்னை உலகியல் அறியாத இளங் குழவியாகக் கருதிப் பேணிக் காக்கின்ற சிறு தெய்வங்கள் எல்லாவற்றினும் பெரிதாகிய பரதெய்வம் என வற்புறுத்தற்கு, “சேயாக எனை வளர்க்கும் மகா தெய்வம்” என்று துதிக்கின்றார். (3)
|