3908. எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
நண்ணியபொன் அம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
உரை: ஞான சபையில் விளங்குகின்ற பரசிவமாகிய தெய்வம் நான் எண்ணியபடி உலகியலின் வாழ்க வென்று எனக்கு அருள் செய்த தெய்வமும், எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்தாந் தன்மையை எனக்கு அளித்த தெய்வமுமாகும்; அன்பர்கள் வந்து பரவுகின்ற பொன்னம்பலத்தின்கண் நடம் புரியும் தெய்வமும், தான் நானாகப் பொருந்துமாறு செய்கின்ற தெய்வமுமாகும்; நான் பண்ணுகின்ற பூசையின் பயனாக எழுந்தருளும் பெரிய தெய்வமும், ஓதப்படுகின்ற வேதத்தின் உச்சியில் நின்றாடுகின்ற தெய்வமும், மனத் திட்பம் உடையவன் என்று என்னை உலகவர் உரைக்குமாறு செய்த தெய்வமுமாகும். எ.று.
எண்ணிய செயல்களை எண்ணியவாறு செய்து ஏற்ற மடையும் எல்லாவற்றையும் செய்ய வல்ல சித்துக்களையும் தனக் கருளினான் என்பது விளங்க, “எண்ணியவா விளையாடு என்றெனை அளித்த தெய்வம் எல்லாஞ் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம்” என வுரைக்கின்றார். பொன்னம்பலத்தே நடம் புரியும் கூத்தப் பெருமானாகிய தெய்வம் என்னுட் கலந்து நானாகியும், வேறாய் நின்று எனக்கு அறிவருளும் வகையில் வேறாய் தானாகியும், அருளுவது தோன்ற, “நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்” எனவும் நவில்கின்றார். தாம் செய்கின்ற சிவ பூசையின் பயனாக நலங்கள் பல பெற்றமை தோன்ற, “பண்ணிய என் பூசையிலே பலித்த பெருந் தெய்வம்” என்று பரவுகின்றார். காலந் தோறும் ஓதப்படுவது பற்றி, வேதத்தை, “பாடுகின்ற மறை” என்று குறிக்கின்றார். தாம் மேற் கொண்ட அருள் நெறியில் கலங்கா உள்ளத்துடன் ஒழுகினமை புலப்பட, “திண்ணியன் என்று எனை உலகம் செப்ப வைத்த தெய்வம்” என்று வடலூர் வள்ளல் வழுத்துகின்றார். திண்ணியன் - அருள் நெறியில் உறைத்த உள்ளமுடையவன். (5)
|