3909.

     இச்சைஎலாம் எனக்களித்த எனைக்கலந்த தெய்வம்
          இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
     எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
          எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
     பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
          பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
     செச்சைமலர் எனவிளங்கும் திருமேனித் தெய்வம்
          சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

உரை:

     ஞான சபையில் விளங்குகின்ற பரதெய்வமாகிய சிவமே என்னுடைய விருப்பங்கள் எல்லாவற்றையும் தூண்டி அவற்றை எனக்குத் தந்து என்னுட் கலந்து கொண்ட தெய்வமாய் இறந்தவர்கள் அனைவரையும் மீளவும் நல்லுணர்வுடையவர்களாக எழுப்புகின்ற தெய்வம்; எல்லாச் சமயங்களும் போற்றுகின்ற தெய்வ வகைகள் எல்லாம் தானே யென நிறைந்து விளங்கும் தெய்வமாய், எல்லாம் செய்ய வல்லதாய், எனது குலத்துக்குரிய தெய்வமாகும்; மனத்தின்கண் உண்டாகும் மயக்கத்தை நீக்கும் பெரிய தெய்வமாய், சிவகாமி எனும் ஓர் ஒப்பற்ற பெண்ணைத் தனக்குத் தேவியாகக் கொண்ட தெய்வமும், எங்கும் நிலவும் தெய்வமும், சிவந்த செச்சை மலர் போல் விளங்கும் திருமேனியையுடைய தெய்வமுமாம். எ.று.

     உயிர்களுக்குரிய அறிவு, இச்சை, செயல் ஆகிய மூன்று ஆற்றல்களையும் தூண்டி அறிவன அறிவித்தும், இச்சித்தவற்றை எய்துவிக்கும் செயற்குரியவற்றைச் செய்வித்தும் உயிரோடு கலந்து இயலுவது பற்றிப் பரசிவத்தை, “இச்சை எலாம் எனக் களித்தே எனைக் கலந்த தெய்வம்” என்று கூறுகின்றார். இச்சையை எடுத்தோதியதால் ஏனை அறிவும் செயலுமாகிய சத்திகள் வருவித் துரைக்கப்பட்டன. இறந்தவர்கள் - நல்லுணர்வை யிழந்தவர்கள். “இறந்தார் இறந்தாரனையர்” (குறள்) என்பதற்கு, “சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர்” என்று பரிமேலழகர் உரைப்பதால் இது பொருளாதல் காண்க. ஞானம் எய்துதற்குரிய உயிர் உடையராயினும் கலக்கத்தால் உண்மை யுணர்வை இழந்து ஞானத்தை எய்தாது கெடுதலின் அவர்களை, “இறந்தார்” என்று இகழ்கின்றார். அப்பெற்றியோர்க்கும் உணர்வொளி தந்து உய்விப்பது பற்றி, “இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்” என்று உரைக்கின்றார். இனி இறந்தார் என்பதற்கு உயிரை இழந்தவர்கள் என்றும், எழுப்புகின்ற தெய்வம் என்பதற்கு மீளவும் உயிர் பெற்று எழச் செய்யும் தெய்வம் என்றும் பொருள் கொள்பவரும் உண்டு. அது ஞான நெறி மரபுக்கு ஒவ்வாமையின் அப்பொருள் சிறவாமை அறிக. உலகில் நிலவும் சமயங்கள் யாவும் ஒவ்வொரு தெய்வத்தைக் குறிக் கொண்டு உரைக்குமாயினும் அவை யாவும் தானே என நிற்கும் சிறப்புப் பற்றிப் பரசிவத்தை, “எச்சமயத் தெய்வமும் தானென நிறைந்த தெய்வம்” என இயம்புகின்றார். “யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருகுவர்” என்றும், “அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாம் குறியது உடைத்தாய் வேதாகமங்களின் குறி யிறந்தங்கு அறிவினில் அருளால் மன்னி அம்மையோ டப்பனாகிச் செறிவொழியாது நின்ற சிவன்” (சிவசித்தி) என்றும் பெரியோர் கூறுவது காண்க. பரம்பொருள் வரம்பில் ஆற்றலுடைய தென்பது பற்றி, “எல்லாம் செய் வல்ல தெய்வம்” என்று இசைக்கின்றார். செய் வல்ல தெய்வம் என்றவிடத்து, செய் என்பது முதனிலைத் தொழிற் பெயர். குலதெய்வம் - குலத்தார்க் கெல்லாம் பொதுவாக வுள்ள தெய்வம். மனத்தில் எழும் இச்சை மீதூர்ந்து அறிவைத் தன்வயமாக்குமிடத்துத் தோன்றும் கடும் பற்று “பிச்சு” எனப்படும். இது பித்து எனவும் வழங்கும். மனத்தின்கண் உண்டாகும் பித்து ஏனை அறிவாற்றலைச் சுருக்கிச் சிறுமைப்படுத்தலின், அதனை நீக்கி நெறிப் படுத்தும் அருளாளனாவது பற்றிச் சிவனை, “பிச்சகற்றும் பெருந் தெய்வம்” என்று போற்றுகின்றார். எங்கும் எல்லார்க்கும் ஞானக் கண்ணில் தோன்ற அருள் இன்பம் வழங்குவது பற்றி, “எங்கும் கண்கண்ட தெய்வம்” என்று இயம்புகின்றார். உமாதேவிக்குக் கணவனாய் என்றும் பிரியாமல் உறையும் பெருமானாதல் பற்றி, “சிவகாமி எனுமோர் பெண் கொண்ட தெய்வம்” எனவும், சிவந்த மேனியுடைமை பற்றிச் சிவனை, “செச்சை மலரென விளங்கும் திருமேனித் தெய்வம்” எனவும், சிறப்பிக்கின்றார். செச்சை மலர் - சிவந்த வெட்சி மலர். சிவந்த நிறமுடைமை பற்றி இதனை “உதிரச் செச்சை” என்று திருத்தக்க தேவர் முதலியோர் வழங்குவர்.

     (6)