3910. சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
உரை: ஞான சபையில் விளங்குகின்ற சிவமாகிய பரதெய்வம் செத்துப் பிறக்கின்ற நிலைமையை மாற்றிச் சாகா வரத்தை எனக்கு அளித்தருளிய ஒப்பற்ற தெய்வமாகும்; அது என்னைச் சன்மார்க்க சபையில் நிறுத்தித் தனித்து ஓங்க வைத்த தெய்வமாகவும், பெருங்காதலால் அதனையே நினைந்தொழுகும் எனக்கென்று வாய்த்த தெய்வமாகவும், பெரிய தவச் செல்வர்கள் எல்லாரும் வாழ்த்தி வணங்குகின்ற தெய்வமாகவும், ஞானமில்லாத ஆன்மாக்களால் எய்த வொண்ணாத உயர்ந்த ஞான நிலையில் என்னை ஏற்றி யருளும் தெய்வமாகவும், நினைக்குந் தோறும் நெஞ்சில் நின்று இனிமை தரும் தெய்வமாகவும், தேகத்தோடு கூடிய உயிர்கள் எல்லாவற்றுக்கும் நலம் செய்யப் பணித்த தெய்வமாகவும் விளங்குவதாம். எ.று.
சாகா வரம் என்பது உலகில் மீள மீளப் பிறந்தும் இறந்தும் வருந்தாத இன்ப நிலை. பிறப்பிறப்புக்கள் துன்ப வியல்பினவாதலால் அதற்கு இரையாகாத மேன்மை நிலையை, “சாகா வரம்” என்று இயம்புகின்றார். மணிவாசகரும், “பரமானந்தப் பழங் கடல் சேர்ந்து ஆவி யாக்கை யான் எனது என்று யாதுமின்றி யறுதல்” (பிரார்த்தனை) என விளங்குவது காண்க. உலகில் உயிர்கள் பன்முறையும் பிறந்து பிறந்து, இறந்து இறந்து அவலமுறுவது இயல்பாதலின் அதனை விலக்குதற் பொருட்டு வடலூர் வள்ளல், “சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம்” என்று குறிக்கின்றார். மாணிக்கவாசகரும் “என்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின்னை வணங்க நாயினேனை ஆவ வென்று அருளுதி” (சதகம் - 74) என்று எடுத்துரைப்பது காண்க. சன்மார்க்க சபையைத் தோற்றுவித்து அச்சபையினருள் ஒருவராய்த் தாமும் இருந்து பணி செய்தற்கு வாய்ப்பளித்தமை பற்றி, “சன்மார்க்க சபையில் எனைத் தனிக்க வைத்த தெய்வம்” என்றும், சிவன்பால் தமக்குள்ள ஆறாக்காதலால் அவரையே நினைந்தும் வாழ்த்தியும் வழிபட்டும் இன்புறும் பேறு தமக்கு எய்தினமையால் “மாகாதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம்” என்றும், தவநெறியில் நிற்கும் ஞானிகள் அனைவரும் இடையறாது வணங்கி வாழ்த்தி வழிபடும் நிலைமை தோன்ற, “மாதவராதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்” என்றும் இசைக்கின்றார். உண்மை ஞானிகளும் தமது ஞானத்தால் கண்டடைய முடியாத பரசிவ நிலையை, “ஏகாத நிலை” எனவும், அந்நிலைக்கண் பெறலாகும் இன்பத்தைத் தாம் பெற்று மகிழச் செய்தலின் வடலூர் வள்ளல், “ஏகாத நிலை அதன் மேல் எனை யேற்றும் தெய்வம்” எனவும், நினைப்பவர் நெஞ்சில் நிலையாய் நின்று நினைக்குந் தோறும் இன்பம் செய்வது பற்றி, “எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்” எனவும் இயம்புகின்றார். ஏகாத நிலையை “நினைப்பதாக சிந்தை செல்லும் எல்லையேய வாக்கினால் தினைத்தனையுமாவதில்லை சொல்லலாவக் கேட்பவே அனைத்துலகு மாய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா எனைத்தெனைத்த தெப்புறத்த தெந்தை பாதம் எய்தவே” என்று மணிவாசகப் பெருமான் விளக்குவது அறிக. தேகத்தோடு கூடி வாழ்கின்ற மக்கள் வாழும் உலகத்தை அருள் நெறிக்கண் நின்று உயிர்ப்பணி புரியுமாறு அறிவுறுத்தும் திருப்பணியைச் செய்விக்கின்ற சிறப்பு நோக்கி, “தேகாதி உலக மெலாஞ் செயப் பணித்த தெய்வம்” என்று சிறப்பிக்கின்றார். இதற்கு உடம்போடு கூடி வாழ்கின்ற உயிர்களுக்குரிய உலக மெல்லாவற்றையும் படைத்தளிக்கும் ஆற்றலை இறைவன் தமக்கு அளித்துள்ளான் என்ற குறிப்புத் தோன்றப் பொருள் கூறுவாருமுண்டு. “உம்பர் பிரான் உற்பத்தி யாதிகளுக் குரியன் உயிர் தானும் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே” (சிவசத்தி) என்று சிவஞான நூல்கள் உரைத்தலால் அது பொருளாகாமை உணரப்படும். (7)
|