3911.

     தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
          துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
     மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
          மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
     ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
          ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
     தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
          சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

உரை:

     ஞான சபையில் விளங்குகின்ற தெய்வமாகிய பரசிவம், தூண்டப் படாத மாணிக்க மணி போலும் விளக்காய் விளங்குகின்றதும், துரியக் காட்சியில் தோன்றுவதும், அருமையும் பெருமையும் வாய்ந்ததுமாகிய பெருமை சான்ற தெய்வமாம்; மாண்டவரை எழுப்ப வல்ல மருந்து போன்றதும், மாணிக்க வல்லியாகிய உமாதேவியை ஒருபால் வைத்திருப்பதும், உயிர்கட்கு நல்லன செய்து ஆட்கொள்ளும் பெரியார்களை ஆண்டருளுவதும், அருட் சோதியாய்த் திகழ்வதுமாகிய தெய்வமாம்; ஆகமங்கள் வேதங்கள் முதலியவற்றால் சிறிதும் இத் தன்மைத் தென அறிதற் கரிதாய், எப்பொருளும் தன்பால் கலவாத பரவெளியில் வளர்வதாய், அவ்வெளியால் தீண்டப் படாததாய் விளங்கும் தெய்வமாம். எ.று.

     திரியிட்டு நெய் பெய்து எரிக்கப்படுகின்ற உலகியல் விளக்குகளைப் போலாமல், தூய மாணிக்க மணியாலாகிய தூண்டுதல் வேண்டாத ஒளி விளக்கைப் போல் செவ்விய சிவஞான ஒளியை நல்குவது பற்றிச் சிவ பரதெய்வத்தை, “தூண்டாத மணி விளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்” என்றும் சொல்லுகின்றார். துரியம் என்பது உந்திக்கண் நின்று ஆன்மா உண்மைப் பொருளை நோக்கும் யோக நிலை. அந்தத் துரியக் காட்சியில் விளங்குவது பற்றிச் சிவனை, “துரிய தெய்வம்” என்றும், வேறு பசுபாச ஞானங்களால் அறிதற் கரிதாய் இலங்குவது பற்றி, “அரிய தெய்வம்” என்றும், தெய்வங்கள் எல்லாவற்றினும் பெருமை மிக்க பெருந் தெய்வமாதலால், “பெரிய பெருந் தெய்வம்” என்றும் போற்றுகின்றார். செத்தாரை எழுப்புகின்ற மருந்து தேவருலகத்தில் நிலவும் சாவா மருந்து. அதுபோல் உயிர்கட்கு எஞ்ஞான்றும் சாதலில்லாத ஞான நிலையை நல்குவது பற்றிச் சிவனை, “மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்” என்று புகழ்கின்றார். இதற்குச் செத்தாரை எழுப்புகின்ற சஞ்சீவி போன்ற தெய்வம் எனப் பொருள் கூறுதலுமுண்டு. செத்தாரை எழுப்ப வல்ல மருந்தும் மந்திரமும் உண்டெனப் புராண இதிகாசங்கள் ஓதுவதால் அந்த மருந்தை நினைவிற் கொண்டு வடலூர் வள்ளல் இவ்வாறு கூறுகின்றார் என்பாருமுளர். மாணிக்க வல்லி, மரகத மணியின் நிறத்தை யுடைய மேனியும், மாணிக்க மணி போன்ற சிவந்த வாயும் உடையவளாதலால் உமாதேவியை, “மாணிக்க வல்லி” என்றும், அவளைத் தம் உடலில் ஒருகூறாக வைத்திருப்பது பற்றி, “மாணிக்க வல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம்” என்றும் கூறுகின்றார். உலகில் உயிர் வகைகட்கு நன்மையாவனவற்றைச் செய்து ஆண்டருளும் பெருமக்களை “ஆண்டார்” எனவும், அவர்களை முடிவில் தாம் அருள் செய்து ஆண்டு கொள்வது பற்றிச் சிவபெருமானை “ஆண்டாரை ஆண்ட தெய்வம்” எனவும், திருவருள் ஞானமாகிய பேரொளியை யுடையவனாதல் பற்றிச் சிவ பரம்பொருளை, “அருட் சோதித் தெய்வம்” எனவும் ஏத்துகின்றார். ஆகம ஞானத்தாலும் வேத ஞானத்தாலும் எட்டியும் சுட்டியும் அறியப் படாத பரம்பொருளாதல் விளங்க, “ஆகம வேதாதி எலாம் அறிவரிதாம் தெய்வம்” என இயம்புகின்றார். மாயா காரியங்களாகிய தத்துவங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாலாயுள்ள பெருவெளியை, “தீண்டாத வெளி” எனவும், அவ்வெளியின்கண் விளங்கினும் அவ்வெளியால் தீண்டப் படாத செம்மையுடைமை பற்றி, “தீண்டாத தெய்வம்” எனவும் எடுத்துரைக்கின்றார்.

     (8)