3912. எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
உரை: ஞான சபையில் விளங்குகின்ற சிவமாகிய பரதெய்வம் யார் எவ்வகையான தவங்களைச் செய்தாலும் எய்துதற் கரிதாகிய பரமாந் தன்மையையுடைய தெய்வமாகும்; ஆயினும், அது எனக்கு எளிதிற் கிடைத்து என் மனத்தை யிடமாகக் கொண்டு எழுந்தருளுகிறது; தவம் செய்தார்க்குத் தவப் பயனாய் விளங்குகின்ற தெய்வமாய் தவம் செய்தார் பெறும் தவலோகத்திற்கு அப்பாலாய் அதற்கப்பால் நிலவுகின்ற பெருவெளிக்கும் அப்பாலதாகிய தெய்வமாம்; ஒத்தவிடத்து ஞான வொளியாய் ஓங்குகின்ற தெய்வமாயினும் பரம்பொருளாம் தன்மையில் ஒன்றான தெய்வமாய் மிகவும் நன்மையே உருக் கொண்டு சிறக்கின்ற தெய்வமாம்; செம்மைத் தன்மையை யுடையதாகிய செம்பொருளென ஞானிகளெல்லாம் சென்றடைகின்ற பெரிய தெய்வமாம். எ.று.
தவஞ் செய்வார் செய்கின்ற தவங்கள் பலவாதலின் எத்தகைய தவங்களைச் செய்தாலும் ஆன்மாக்களால் எய்தலாகாத அருமை யுடைய தென்றற்குப் பரசிவத்தை, “எவ்வகைத்தாம் தவஞ் செயினும் எய்தரிதாம் தெய்வம்” என்று பராவுகின்றார். தவஞானிகட்கு அரிய தெய்வமாயினும் எம்போல் எளியவர்களும் எளிதிற் பெறத் தக்கதாய் எம்போல்வார் மனத்தை யிடமாகக் கொள்வதாய்த் திகழும் தெய்வம் என்பாராய், “எனக்கு எளிதிற் கிடைத்து என் மனம் இடங் கொண்ட தெய்வம்” என்று இயம்புகின்றார். எய்தற் கரிதாய் எளிதிற் கிடைப்பதாய் அன்பர்கள் மனத்தை இடங் கொள்வதாய் விளங்கும் அவ்வவ் வகையான தெய்வமாய் அத்தெய்வ மதங்களுக்கு அப்பாலாய் அப்பத பதார்த்தங்களுக்கு அப்பாலாயுள்ள பெருவெளிக்கும் அப்பாலாய் விளங்குவதாம் என்பாராய், “அவ்வகைத்தாம் தெய்வம் அதற்கப்பாலாம் தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாம் தெய்வம்” என்று சொல்லுகின்றார். அப்பொருள் நிலைக்கு ஒத்த இடத்தை ஒவ்வகம் என்றும், அங்கே ஞானப் பேரொளியாய் ஓங்கும் இயல்புடைமை பற்றி, “ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்” என்றும் உரைக்கின்றார். மேற் கூறியவாறு இயல்பும் செய்கையும் இருப்பும் கொள்வதால் பலவாகாமல் தான் ஒன்றே ஒன்றாகவும் தமது ஒருமை முழுதும் நன்மையே மிகவும் அமைந்ததாகவும் விளக்குதற்கு, “ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம்” எனவும், அதனுடைய செம்மைத் தன்மையைச் செவ்வகையாக உணர்ந்த ஞானச் செல்வர்கள் சென்று சேரும் பெரிய பொருளாதல் விளங்க, “செவ்வகைத்து என்று அறிஞரெலாம் சேர் பெரிய தெய்வம்” எனவும் விளக்குகின்றார். (9)
|