3913. சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
சத்திகள்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
நிந்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
உரை: ஞான சபையில் விளங்குகின்ற பரசிவமாகிய தெய்வம் சத்தாந் தன்மையே நிறைந்த ஒப்பற்ற தெய்வமாய், எப்பொருளாலும் தடுக்க வொண்ணாத சால்புடைய தெய்வமாம்; எண்ணிறந்த தன்னுடைய சத்திகள் எல்லாம் ஆங்காங்கு விளங்கி நிற்க, சத்தாகிய தான் உயர்ந்தோங்கும் தெய்வமாம்; நித்தப் பொருளாகிய தனது நித்த மயமாய் நிலைபெறுகின்ற தெய்வமாய் எல்லா வகையான நிலைகளும் தனது அருள் வெளியில் நிலைபெற வைக்கின்ற தெய்வமாம்; பத்தி பண்ணுகின்ற ஆன்மாக்களின் பத்தியாகிய வலைக்குள் அகப்பட்டு வேண்டும் நலன்களைப் புரியும் தெய்வமாய் என் போன்ற எளியாருடைய பத்திக்கு இரங்கி எல்லா நலன்களையும் தந்து என்றும் கெடாத இன்பப் பதவியில் இருக்க வைக்கும் இனிய தெய்வமாகும்; சித்தர்கள் விரும்புகின்ற சித்திகளனைத்தையும் தந்தருளும் தெய்வமாவதோடு சிவாகமங்கள் உரைக்கும் சிவானந்தப் பரதெய்வமுமாகும். எ.று.
சத்தாந் தன்மையே தன் றன்மையாகக் கொண்டு விளங்கும் தெய்வமாதல் பற்றிப் பரசிவத்தை, “சத்தியமாம் தனித் தெய்வம்” என்று சாற்றுகின்றார். எல்லா வகை உயிர்களிலும் எவ்வகைப் பொருள்களிலும் தங்கு தடையின்றித் தோய்ந்து கலந்தருளுவது பற்றி, “தடை யறியாத் தெய்வம்” என்று குறிக்கின்றார். எண்ணிறந்த பொருள்களுக்குள்ளும் கலந்து தனது அருட் சத்தியால் அவ்வவற்றின் எண்ணிறந்த சத்திகள் யாவும் இனிது விளக்கமுறத் தான் உயர்தனிச் சத்தியாய் நிலவுமாறு புலப்பட, “சத்திகள் எலாம் விளங்கத் தானோங்கும் தெய்வம்” என்று விளக்கம் செய்கின்றார். என்றும் பொன்றாத நித்தப் பொருளாகிய தான் தனது நித்தத் தன்மையே விளங்க நிற்பது பற்றி, “நித்திய தன்மயமாகி நின்ற தெய்வம்” எனவும், எல்லா உலகங்களிலும் உள்ள ஆன்மாக்கள் செய்யும் வினைப் பயனுக் கேற்ப அமைந்த நிலைகள் (பதங்கள்) எண்ணிறந்தனவாதலின், அவை யாவும் நின்றாங்கு நின்று தம்கண் உறையும் ஆன்மாக்களுக்குப் போக போக்கியங்களைத் தருதற் கேற்பத் தனது திருவருளாகிய பெருவெளியின்கண் இருக்க வைத்துள்ளமை தோன்ற, “எல்லா நிலைகளும் தன் அருள்வெளியில் நிலைக்க வைத்த தெய்வம்” எனவும் தெரிவிக்கின்றார். அணிமா மகிமா முதலிய சித்திகளைப் பெறுதற்கு முயலும் சித்தர்களுக்கு அவ்வவர் விரும்பும் சித்திகள் பலவற்றையும் தந்தருளும் தெய்வ மென்றும், சித்தாந்தமாகிய சிவாகமங்கள் முடிபொருளாக எடுத்துரைக்கும் பரசிவம் என்றும் வற்புறுத்தற்கு, “சித்தி எலாம் தரும் தெய்வம் சித்தாந்தத் தெய்வம்” என்றும் ஓதி வழிபடுகின்றார். (10)
|