42. பேரானந்தப் பெருநிலை
அஃதாவது, சிவயோக முயற்சியில் முதிர்ந்து கனிந்த சிவானந்தமாகிய சிவபோகம் நல்கும் பரசிவத்தின் பெருமை சான்ற இயல்பு கூறுவதாம். பேரானந்தம் - பெருமைக்கு எல்லையாகிய சிவபோகம். சிவஞானத்தின் பெரிய நிலை அதுவாதல் பற்றிச் சிவானந்தப் பெரும் போகம் பெருநிலை எனப்படுகிறது. பழுத்த பேரானந்தப் பழம் எனச் சிறப்பிக்கப்பட்டு இப்பகுதிக்கண் பாட்டுத் தோறும் மகுடமாய் விளங்குவது பற்றிப் “பேரானந்தப் பெருநிலை” எனப் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3914. அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
ஆனந்த போகமே அமுதே
மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
மன்னும்என் ஆருயிர்த் துணையே
துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
தூயவே தாந்தத்தின் பயனே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
உரை: பணிவு அமைந்த தொண்டர்களின் திருவுள்ளத்தில் இனிமை நிலவ விளங்குகின்ற சிவயோகமாகிய மரத்தில் கனிந்த பெரிய சிவானந்தமாகிய பரசிவமாகிய பழமே! அழகு மிகுகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் ஆடல் புரிகின்ற சிவமாகிய ஆனந்த போகமே! அமுதமே! மாணிக்க மணியின்கண் ஒளிர்கின்ற ஒளியே! அவ்வொளிக்குள் உள்ளொளியாகத் திகழும் ஒளிப் பொருளே! நிலைபெற்ற என் அரிய உயிர்க்குத் துணையாய் விளங்குகின்ற பரம்பொருளே! தெளியப் படுகின்ற சிவாகமங்கள் கூறும் பெரிய பொருளே! தூயதாகிய வேத வேதாந்த நூல்களின் ஞானப் பயனாய் விளங்குபவனே வணக்கம். எ.று.
அன்பும் பணிவுமுடைய மெய்யன்பர்களாகிய தொண்ட ருள்ளத்தில் நினைக்குந்தோறும் தேனினும் இனிமை மிகக் கனிந்த பெரிய ஆனந்தத்தை என் போன்றார்க்கு நல்கும் சிவமாகிய கனி யெனச் சிறப்பித்தற்கு, “பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேரானந்தப் பழமே” என்று புகழ்கின்றார். அன்பும் பணிவும் இருந்தாலொழியத் தொண்டுள்ளம் பிறவாதாகலினாலும் தொண்டு புரியும் உள்ளத்தில் சிவ நினைவு மிகுந்து இன்பஞ் செய்தலினாலும், “பணிவுறும் உளத்தே இனித்திட” என்று பகர்கின்றார். “நினைவார் நினைய இனியான்” என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. திருச்சிற்றம்பலத்தில் நிகழும் திருக்கூத்துக் கண்டு பணிகின்ற ஞானவான்களுக்கு ஞானவமிர்தமாய்ச் சிவானந்தப் பேரின்பத்தை நல்குவது பற்றி, “திருச்சிற்றம்பலத்தாடும் ஆனந்த போகமே அமுதே” என்று போற்றுகின்றார். சிவத்தின் திருமேனி மாணிக்க மணி போல் விளங்குதலால் அந்த மணியொளியை வியந்து, “மணிவளர் ஒளியே” என்றும், ஒளிக்கு மூல காரணமாய் உள்ளிருந்து ஒளி திகழச் செய்வது பற்றிச் சிவனை, “ஒளியினுள் ஒளியே” என்றும் உரைக்கின்றார். எடுத்த உடம்பும் உடம்போடு கூடி வாழும் உலகுகளும் அழிந்தாலும் உயிர் அழிவ தில்லாமையால், “மன்னும் ஆருயிர்” என்றும், அத்தகைய உயிர்க்கு உயிராய் இருந்து உணர்வு தந்து துணை புரிவதால் சிவபெருமானை, “மன்னும் என் ஆருயிர்த் துணையே” என்றும் மகிழ்ந்து பராவுகின்றார். சித்தாந்தம், சிவாகமங்கள் சிவஞானப் பொருளைத் தடை விடைகளால் விளக்குவது பற்றி அதனை, “துணிவுறு சித்தாந்தம்” எனவும், அந்தச் சிவாகமங்களால் ஆராய்ந்து தெளியப்படும் பெருமை யுடைய தென்றற்கு, “சித்தாந்தப் பெரும் பொருளே” எனவும், வேதங்களும் வேதாந்தமாகிய உபநிடதங்களும் சிவஞானத்தைத் தூய நெறியில் எடுத்தோதுவது பற்றி, “தூய வேதாந்தத்தின் பயனே” எனவும் சொல்லுகின்றார்.
இதனால், வேதாந்த சித்தாந்தப் பொருட் பயனாய்ச் சிவம் விளங்குமாறு குறிக்கப் பட்டவாறாம். (1)
|