3915. திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
உவந்தர சளிக்கின்ற அரசே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
உரை: துன்பத்தைப் போக்கி எனக்குள் இன்பமே நிலவுமாறு சிவயோகமாகிய மரத்தில் பழுத்த பெரிய சிவானந்தத்தை நல்கும் கனி போல்பவனே! கண்டார் விரும்பும் அழகு மிக்க திருச்சிற்றம்பலத்தில் ஆடல் புரிகின்ற தெய்வமாய் ஞானிகள் விரும்பும் மெய்ம்மைப் பொருளாய்த் திகழ்கின்ற சிவமே! உருவப் பொருளாய் உலகில் விளங்கும் ஒளிப் பொருளே! அவ்வொளிகட் கெல்லாம் மூல காரணமாகிய உள்ளொளியே! ஓங்குகின்ற என்னுயிர்க்குப் பெரிய அறிவுத் துணை செய்யும் பரம்பொருளே! ஒப்பற்ற தனித் தலைமையால் சிறந்த திருவருள் ஞானமாகிய அருள் வெளியின் நடுவண் இருந்து மகிழ்வோடு அருளரசு புரிகின்ற சிவமாகிய அரசே, வணக்கம். எ.று.
பருவரல் - துன்பம். உலகியல் வாழ்வில் தொடர்ந்து தாக்கும் துன்பங்களால் உயிரின்கண் இன்ப ஒளி மறைந்தொழிதலால், “பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேரானந்தப் பழமே” என்று சிறப்பிக்கின்றார். தொடர்ந்து வந்து தாக்கும் துன்பத்தால் வாழும் உயிர்கள் மனங் கசந்து வருந்துவதைப் போக்கி இன்பச் சுவை பெறுமாறு ஞான வின்பத்தை நல்குவது பற்றி, “இனித்திட எனக்கே பழுத்த பேரானந்தப் பழமே” என்று போற்றுகின்றார். தெய்வ வடிவில் சடை முடியும் எண்டோளும் முக்கண்ணும் உடையனாய் நின்றாடுதலால், “திருச்சிற்றம்பலத்தாடும் தெய்வமே” எனவும், தெய்வ வடிவோடு நிற்பினும் ஞானிகளின் ஞானக் கண்களுக்கு இன்னவுரு இன்ன நிறம் என்று எடுத்துரைக்க மாட்டாத மெய்ப்பொருளாய் விளங்குவது பற்றி, “மெய்ப்பொருள் சிவமே” எனவும் விளம்புகிறார். சிவனது திருக்கூத்து நிகழும் திருச்சிற்றம்பலம் அன்பொடு வந்து காண்பார்க்கு அயரா இன்பம் நல்குவது பற்றி, “திருவளர் திருச்சிற்றம்பலம்” எனத் தெரிவிக்கின்றார். ஒளி யுருவாய் மக்கள் கண் கொண்டு காண விளங்குதலின் ஒளிப் பொருளை, “உருவளர் ஒளியே” என்றும், ஒளி யெல்லாம் மேன் மேலும் ஓங்குதற்கு ஏதுவாய் உள் நின்றொளிரும் பரம காரண சிவவொளியை, “ஒளியினுள் ஒளியே” என்றும், உயிர்களுக்கு உயிருணர்வாய் உணர்வு நல்கி வாழ்வாங்கு வாழ்தற்குத் துணை புரிதலின், “ஓங்கும் என்னுயிர்ப் பெருந் துணையே” என்றும் உரைக்கின்றார். தத்துவாதீதப் பெருவெளியில் சிவனது திருவருள் ஞான ஒளிகட்கெல்லாம் தனித் தலைமையுடன் எல்லா வுலகுயிர்களையும் நின்றாங்கு நின்று நிலவச் செய்தலின், “அருள் வெளி நடுவே உவந்து அரசு அளிக்கின்ற அரசே” என உரைக்கின்றார்.
இதனால், பேரானந்தப் பழமாகிய சிவ பரம்பொருள் அருள் வெளியின்கண் அருளரசு புரியும் திறம் எடுத்தோதியவாறாம். (2)
|