3917. சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
செல்வமே என்பெருஞ் சிறப்பே
நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
திருந்தர சளிக்கின்ற பதியே
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
உரை: மண்ணுலகில் வாழும் எனது உள்ளத்தில் இனிமை மிகுமாறு முதிர்ந்து கனிந்து விளங்கும் பெரிய ஆனந்த சிவ பரம்பொருளாகிய கனியே! சிறப்பு மிகுகின்ற திருச்சிற்றம்பலத்தின் ஓங்குகின்ற சிவஞானச் செல்வமே! எனக்குரிய பெரிய சிறப்புப் பொருளே! நீர் தோன்றி மிகுதற் கேதுவாகிய நெருப்பாகிய பூதமே! நெருப்பின்கண் ஒளிரும் ஒளிப் பொருளே! நிறைந்த ஒளியினை நல்கும் ஒப்பற்ற வானவெளியே! உயர்வு மிகுந்த கலாந்தம் முதற்கொண்டு விளங்கும் அந்தங்கள் ஆறினும் இருந்து அருளரசு புரிகின்ற சிவ பதியே, வணக்கம். எ.று.
மண்ணுலகில் வாழும் என்னுடைய உள்ளத்திற் படியும் துன்பத்தைப் போக்கி இன்பம் நிறைதற் பொருட்டு முதிர்ந்த பேரானந்தத்தை நல்கும் சிவமாகிய கனியே என்று பாராட்டுவாராய், “பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேரானந்தப் பழமே” என்று பராவுகின்றார். திருச்சிற்றம்பலத்தின்கண் ஞான நடம் புரிந்து விளங்குவது பற்றி, “திருச்சிற்றம்பலத் தோங்கும் செல்வமே” எனவும், தன்னால் சிறப்புடைய பொருளாகக் கருதப் படுவனவற்றுள் உயர்வற வுயர்ந்த சிறப்புடைப் பொருளாகக் கருதப் படுவது விளங்க, “என் பெருஞ் சிறப்பே” எனவும் சிவபெருமானை நினைக்கின்றார். வானத்தினின்று காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றின என நூலோர் கூறுதலால், நீர் தோன்றுதற்கு ஏதுவாகிய நெருப்பை, “நீர் வளர் நெருப்பு” என்றும், அந் நெருப்பின்கண் ஒளி திகழ்வது பற்றி, “நெருப்பினுள் ஒளியே” என்றும், உள் நிலவும் பூத வெளியை “நிறை ஒளியை வழங்குமோர் வெளியே” என்றும் உரைக்கின்றார். கலாந்தம், வேதாந்தம், சித்தாந்தம், யோகாந்தம், போதாந்தம், நாதாந்தம் என்ற ஆறும் ஒன்றினொன்று முறையே சிறந்து நிற்றலின், ஏர்தரு கலாந்தமாதி ஆறந்தம்” என்றும், இந்த அந்தங்களில் ஆங்காங்கிருந்து அருளொளி வழங்குதலால், “ஆறந்தத்திருந்து அரசளிக்கின்ற பதியே” என்றும் புகல்கின்றார்.
இதனால், கலாந்தம் முதல் நாதாந்தம் ஈறாக வுள்ள ஆறந்தங்களிலும் எழுந்தருளி அருளொளி பரப்பும் சிவத்தின் தலைமை நலம் எடுத்தோதியவாறாம். (4)
|