3918.

     உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
          ஒள்ளிய தெள்ளிய ஒளியே
     வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
          மந்திரத் தாற்பெற்ற மணியே
     நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
          நிறைந்தர சாள்கின்ற நிதியே
     பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
          பழுத்தபே ரானந்தப் பழமே.

உரை:

     அருட் சத்தி எழுந்தருளும் என் உள்ளத்தின்கண் இனிமையுண்டாக எனக்குள் முதிர்ந்து ஒழுகும் பெரிய ஆனந்தத்திற்கு முதலாகிய சிவப் பழமே! புகழ் மிகுகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் ஓங்கி ஒளிரும் ஒள்ளிய தெளிந்த ஞான ஒளிப் பொருளே! மலைகளிற் பெறலாகும் சிறந்த மருந்து போல்பவனே! மௌன நிலையில் இருந்து கணிக்கப்படும் மந்திர வுருவாகியவனே! மந்திர வுரு வேற்றப்பட்ட மணியாகியவனே! முறையாக வுள்ள சுத்த தத்துவ நிலைக்கு மேல் விளங்கும் தத்துவாதீத நிலையில் நிறைந்து வீற்றிருந்து அருளரசு புரிகின்ற அருட் செல்வமே, வணக்கம். எ.று.

     பரை - அருட் சத்தி; இதனைப் பரன் என்னும் ஆண்பாற் சொல்லுக்குப் பெண்பாலாகக் கொள்வதுமுண்டு. இது பராசத்தி எனவும் வழங்கும். இவ்வருட் சத்தி உயிர்களின் உள்ளத்தின்கண் இருந்து உடலின் உள்ளும் புறமுமாகிய கருவிகள் ஒழுங்குறப் பணி செய்தற்பொருட்டு உதவி யருளும் சிறப்புடையதாதல் பற்றி, “பரையுறும் உளத்தே இனித்திட” என்று பகர்கின்றார். உரை - புகழ். திருச்சிற்றம்பலத்தின்கண் கூத்தப் பெருமான் ஞான நாடகம் புரியுமிடத்துச் சிவஞானப் பேரொளியாய்த் திகழ்வது பற்றி, “சிற்றம்பலத்து ஓங்கும் ஒள்ளிய தெள்ளிய ஒளியே” என்று உரைக்கின்றார். உயிர்க்கு நலம் பயக்கும் மருந்துகள் பலவும் மலைகளில் கிடைக்கின்றன எனச் சித்த வைத்திய நூல்கள் கூறுவதால் சிவனை, “வரை வளர் மருந்தே” என்று குறிக்கின்றார். மானதம், மந்தம், உரை என மூவகையாக எண்ணப்படும் மந்திரங்களும் மௌன நிலையில் மானதமாகச் சிந்திக்கப்படும் மந்திரம் சிறந்ததாகலின் அதுபற்றிச் சிவனை, “மௌன மந்திரமே” எனவும், மந்திர வுருவேற்றிய மணி தன்னை அணிவார்க்கு மிக்க பயன் விளைக்கும் என உயர்ந்தோர் கூறுதலால், “மந்திரத்தால் பெற்ற மணியே” எனவும் போற்றுகின்றார். அசுத்தம், சுத்தாசுத்தம், சுத்தம் எனத் தத்துவ நிலைகள் வரிசையாக மேன் மேலாக வைத்து உரைக்கப்படுதலால், “நிரை தரு சுத்த நிலை” என்றும், சுத்த நிலைக்கு மேல் நிலை தத்துவாதீத நிலை எனப்படுதலால் ஆங்கிருந்து இறைவன் அருளரசு புரிகின்றான் என்பது பற்றி, “மேன் நிலையில் நிறைந்து அரசாள்கின்ற நிதியே” என்றும் கூறுகின்றார். திருவருள் பெருநிதியாகப் பேசப்படுவதால் அவ்வருளே உருவாக வுடைய சிவபெருமானை “நிதியே” என்று புகழ்கின்றார்.

     இதனால், அசுத்தம், சுத்தாசுத்தம், சுத்தம், என்ற தத்துவ நிலை மூன்றுக்கும் அப்பாலுள்ள அதீத நிலையில் எழுந்தருளி இறைவன் அருள் புரிகின்ற திறம் உரைத்தவாறாம்.

     (5)