3919. மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
மெய்யறி வானந்த விளக்கே
கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
கதிர்நடு வளர்கின்ற கலையே
ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
பால்அர சாள்கின்ற அரசே
பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
உரை: தன்பால் அன்பு மிகும் உள்ளத்தின்கண் இன்பம் தழைக்குமாறு என் பொருட்டு முதிர்ந்தோங்கிய பேரானந்தத்தை நல்கும் சிவமாகிய கனியே! மேன் மேல் சிறப்புறும் திருச்சிற்றம்பலத்தின்கண் ஓங்கி விளங்கும் சச்சிதானந்தமாகிய அருள் விளக்காகியவனே! காற்றாகிய பூதத்திலிருந்து தோன்றிய நெருப்பே! அந் நெருப்பின்கண் எழுந்து மிகுகின்ற ஒளிக் கதிரே! அக்கதிர் நடுவில் வளர்கின்ற கலைச் செல்வமே! உயர்வாகப் பேசப்படும் உபசாந்தமாகிய பரவெளிக்கு, அப்பால் அருளரசு புரிகின்ற சிவபெருமானே வணக்கம். எ.று.
திருச்சிற்றம்பலத்தின் பெருமை மேன்மேலும் மிகுகின்ற இயல்புடையதாதலின், “மேல் வளர் திருச்சிற்றம்பலம்” என்றும், அதன்கண் நின்று ஞானத் திருக்கூத்தால் சத்தும் சித்தும் ஆனந்தமுமாகிய மூன்றும் ஓருருவாய் அமைந்த ஞான விளக்கம் என்றற்கு, “மெய்யறி வானந்த விளக்கே” என்றும் விளம்புகின்றார். காற்றாகிய பூதத்திலிருந்து நெருப்பும், நெருப்பினிடத்தே எழுகின்ற ஒளியும், ஒளி நடுவில் திகழ்கின்ற கலாரூபமுமாகிய சிவமே என்றற்கு, “கால் வளர் கனலே கனல் வளர் கதிரே கதிர் நடு வளர்கின்ற கலையே” என்று உரைக்கின்றார். கலாரூபம் ஒளி மயமாவது பற்றி, “கலையே” என்று குறிக்கின்றார். ஆலுதல் - புகழ்ந்தோதுதல்; அசைதல் என்றுமாம். உபசாந்தப் பரவெளி - உபசாந்தப் பாழ். மாயப்பாழ், போதப் பாழ், உபசாந்தப் பாழ் என்ற மூன்றனுள் காரண காரிய ஆராய்ச்சிக்கு இடமில்லாதது உபசாந்தப் பாழ் எனப்படும். இம்மூன்றனுள் உபசாந்தம் மேலதாகலின் அதனை, “ஆலுறும் உபசாந்தப் பரவெளி” என்று பகர்கின்றார். இதனைக் “காரியம் ஏழ் கண்டறும் மாயப்பாழ், காரணம் ஏழ் கண்டறும் போதப் பாழ், காரிய காரண வாதனை கண்டறும் உபசாந்தப் பாழ்” (2495) என்று திருமந்திரம் ஓதுவது காண்க. இம்மூன்றையும் மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் என்றும் வழங்குவதுண்டு. மாயப் பாழ், சீவப் பாழ் இரண்டற்கும் மேலதாய் சாந்தப் பதமாகிய சிவத்துக்குக் கீழதாய் உள்ள பரவெளி உபசாந்தமாதலின், அதற்கப்பாலதாகிய பரசிவ வெளியின்கண் விளங்குகின்ற பரசிவத்தை, “உபசாந்தப் பரவெளிக் கப்பால் அரசாள்கின்ற அரசே” என்று போற்றுகின்றார். முப்பாழும் கடந்து அப்பாலதாகிய பரவெளியை “முழுப் பாழ்” என்றலும் உண்டு.
இதனால், அன்பர்பால் அவர்களுடைய உள்ளம் இனிக்க, எழுந்தருளிச் சிவ பரம்பொருள் சிவானந்தத்தை ஆன்மா இன்புற அளித்த சிறப்பு ஓதியவாறாம். (6)
|