3920.

     இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
          இன்பமே என்னுடை அன்பே
     திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
          திகழுறத் திகழ்கின்ற சிவமே
     மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
          வெளிஅர சாள்கின்ற பதியே
     பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
          பழுத்தபே ரானந்தப் பழமே.

உரை:

     அன்பு மிக்க என் உள்ளத்தில் இனிமை யுறுமாறு என் பொருட்டு எழுந்தருளிய கனிந்த பேரானந்தத்தை நல்கும் பரம்பொருளாகிய கனியே! புகழ் மிகுகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் ஓங்கிய இன்பத்தை நல்கும் என்னுடைய அன்புருவாகிய பெருமானே! நாற்றிசையிலும் மிக்குறும் அண்ட கோடிகளனைத்தும் ஒளி மிக்கு விளங்க அருள் புரிந்து திகழும் சிவ பரம்பொருளே! எல்லாத் தத்துவங்கட்கும் மேலதாகிய அதீதப் பரவெளி எனப்படும் மௌன வெளிக்கு அப்பால் அதன் மேலுள்ள பரசிவ வெளியில் அருளரசு புரிகின்ற சிவபதியே! வணக்கம். எ.று.

     அன்பர்களின் உள்ளத்தில் ஊற்றெழ இனிமை செய்கின்ற பெருமானாதல் பற்றி, “பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேரானந்தப் பழமே” என்று போற்றுகின்றார். இசை - புகழ். திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளும் கூத்தப்பெருமான் தனது காட்சியால் கண்டு பணிபவர்க்கு இன்பமாகவும் அன்பர்களுக்கு அன்புருவாகவும் விளங்குவது பற்றி, “இசை வளர் திருச்சிற்றம்பலத்தோங்கும் இன்பமே என்னுடை அன்பே” என்று புகழ்கின்றார். அழியா இன்பம் தருவது பற்றி, “இன்பமே” என்றும், அன்புருவாய் விளங்குதலால், “அன்பே” என்றும் சிறப்பிக்கின்றார். திசைகளனைத்திலும் எண்ணிறந்த அண்டங்கள் உளவாதலால், அவையனைத்தும் கெடாது நின்று நிலவச் செய்யும் சிவனது இறைமைத் தன்மையை எடுத்துக் காட்டற்கு, “திசை வளர் அண்ட கோடிகள் அனைத்தும் திகழுறத் திகழ்கின்ற சிவமே” என்று தெரிவிக்கின்றார். இவ்வண்டங்கள் அத்தனையும், மாயா மண்டலத்தின் அகத்தே நிலவுவன என்று பெரியோர் கூறுதலின், அம்மாயையின் மேலதாகிய அதீத வெளியை, “மிசையுறு மௌன வெளி” என்றும், அதற்கு மேலுள்ள பரவெளியை “அதன் மேல் வெளி” என்றும் குறிப்பிட்டு, அப்பரவெளியின்கண் சிவசூரியனாய் விளங்கி அருளரசு புரிவது பற்றி, “அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே” என்று பாடுகின்றார். பசை - அன்பு. அன்பு நிறைந்த உள்ளத்தை, “பசையுறும் உளம்” எனவும், உள்ளத்தால் உள்குவார்க்கு உலவாப் பேரின்பம் தருவது பற்றி, “உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேரானந்தப் பழமே” எனவும் பராவுகின்றார்.

     இதனால், அண்ட கோடிகள் அனைத்தும் நிலைபெற்றுத் திகழ்வதற்குச் சிவ பரம்பொருள் காரண மென்பது வெளிப்படுத்தியவாறாம்.

     (7)