3921.

     அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
          அரும்பெருஞ் சோதியே எனது
     பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
          புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
     மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
          மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
     பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
          பழுத்தபே ரானந்தப் பழமே.

உரை:

     அருளொளி மிகுகின்ற திருச்சிற்றம்பலத்தின்கண் உயர்ந்தோங்குகின்ற அருமையும் பெருமையுமுடைய சோதிப் பொருளாகிய சிவமே! உயிர்க்கு உணர்வுப் பொருளாய்ச் சிறக்கின்ற அறிவு தந்து அந்த அறிவுக்கு உண்மையை உள்ளவாறு உணரும் உண்மை யறிவு தந்து என்னை அருள் நெறிக்குப் புறத்தே செல்ல விடாது ஆண்டருள்கின்ற மெய்ப்பொருளே! மாயா மண்டலத்து உச்சியில் பொருந்திய ஒப்பற்ற நாத வெளிக்கு அப்பாலுள்ள பரவெளியில் எழுந்தருளி அருளரசு புரிகின்ற வாழ்வரசே! துன்பத்தை நீக்கி இன்பம் உண்டாகுமாறு என் பொருட்டு அறிவின்கண் பழுத்து முதிர்ந்த பெரிய ஆனந்தத்தை நல்குவதாகிய சிவக் கனியே, வணக்கம். எ.று.

     அருள் ஞானவொளி திகழும் ஞானாகாசமாதலால், “அருள் வளர் திருச்சிற்றம்பலம்” என்று அதனைச் சிறப்பிக்கின்றார். சிவஞானப் பேரொளி அருமையும் பெருமையும் உடையதாதலால், “அரும் பெரும் சோதி” என்றும் உரைக்கின்றார். உடம்பொடு கூடி வாழும் உயிர்க்குப் பொருளாய் இலங்குவது பொறி புலன்களின் வழியாகக் காணப்படும் பொருள்களைப் பற்றிய அறிவாதலின் அதனை, “பொருள் வளர் அறிவு” எனவும், பொருள் அறிவினும் உண்மையை உள்ளவாறு உணரும் உண்மையறிவும் இன்றியமையாததாய், இறைவனால் அருளப் படுவதாய் இருத்தல் பற்றி, “பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து” எனவும், உலகியற் பொருளின்ப நெறியில் சென்று கெடாதவாறு ஆட்கொண்டு திருவருட் சிவநெறியில் தழுவிக் கொண்டது புலப்பட, “அறிவு தந்து என்னைப் புறம் விடாது ஆண்ட மெய்ப் பொருளே” எனவும் இசைக்கின்றார். நிலம் முதல் நாதம் ஈறாக வுள்ள தத்துவம் முப்பத்தாறும் மாயையாகிய பெருவெளியில் இருத்தலால், “மருவும் ஓர் நாதவெளி” என்றும், நாதவெளிக்கு மேல் உளதாகிய பரசிவ வெளியில் எழுந்தருளி அருளரசு செய்வது விளங்க, “மேல் வெளியில் மகிழ்ந்து அரசாள்கின்ற வாழ்வே” என்றும் ஓதுகின்றார். உலகியல் வாழ்வு விருப்பு வெறுப்புக்களால் துன்பத்தை உண்டாக்கி இன்பப் பேற்றுக்குத் தடையாதல் தோன்ற, “பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேரானந்தப் பழமே” எனப் பராவுகின்றார்.

     இதனால், நாத வெளிக்கு மேலுள்ள பரநாத வெளிக் கப்பாலதாகிய பரசிவ வெளியின்கண் சிவ பரம்பொருள் இருந்து அருளரசு புரியும் திறன் அறிவித்தவாறாம்.

     (8)