3922. வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
மாபெருங் கருணைஎம் பதியே
ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
உலகமும் நிறைந்தபேர் ஒளியே
மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
வயங்கும்ஓர் வெளிநடு மணியே
பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
பழுத்தபே ரானந்தப் பழமே.
உரை: பெருமை பொருந்திய திருச்சிற்றம்பலத்தில் உயர்ந்தோங்குகின்ற மிக்க கருணை யுருவாகிய சிவபதியே! உடம்பொடு கூடி வாழும் உயிர்களுக் கெல்லாம் உயிராய் எல்லா உலகத்திலும் நிறைந்து ஒளிரும் பெரிய ஒளிப் பொருளாகிய சிவமே! திருமால் முதலிய மூர்த்திகளின் பதங்கட்கு மேலாய் விளங்குகின்ற ஒப்பற்ற பரவெளியில் நடுமணியாய்த் திகழ்கின்ற பெருமானே! அருளுருக் கொண்டு உள்ளத்தின்கண் இன்பம் உண்டாகுமாறு எழுந்தருளுகின்ற என் போன்றார்க்கெனப் பழுத்து முதிர்ந்த இனிய பெரிய இன்பக் கனியாகிய சிவ பரம்பொருளே, வணக்கம். எ.று.
அழியாப் பெருமை கொண்டு பிறங்குவதாதலால், “வான் வளர் திருச்சிற்றம்பலம்” என்றும், அதன்கண் பெரிய கருணை யுருக் கொண்டு கூத்தப் பெருமானாய்க் காட்சி தருவது பற்றி, “திருச்சிற்றம்பலத்தோங்கும் மாபெருங் கருணை எம் பதியே” என்றும் ஏத்துகின்றார். உடம்பொடு கூடி வாழும் உயிர்கட்கு உயிராய் உணர்வு தந்தருளுவதோடு எல்லா உலகுயிர்களிலும் நீக்கமற நிறைந்து ஞானம் நல்குவது பற்றி, “ஊன் வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா உலகமும் நிறைந்த பேரொளியே” என ஓதுகின்றார். மான் முதல் மூர்த்தி மானிலை, திருமால் பிரம்மன் உருத்திரன் ஆகிய மூவர்க்கும் உரியவாய் ஒன்றன் மேல் ஒன்றாய் உயர்ந்துள்ள பிரம்ம பதம், வைகுந்த பதம், உருத்திர பதம் ஆகிய மூன்றிற்கும் அப்பால் மேலாய் விளங்கும் பரசிவ வெளியின் நடு நின்று ஒளிரும் நாயக மணியாய்த் திகழ்வது விளங்க, “மான் முதன் மூர்த்தி மானிலைக் கப்பால் வயங்கும் ஓர் வெளி நடுமணியே” என விளம்புகின்றார். அருள் வழங்கும் பண்பு மேற் கொண்டு அவரவர் உள்ளத்தின்கண் இன்ப முண்டாக எழுந்தருளும் நலத்தைப் பாராட்டுவாராய், “பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேரானந்தப் பழமே” என்று புகழ்கின்றார்.
இதனால், திருமால் முதலிய தேவர் பதங்களுக்கு மேலாய பரசிவ வெளியில் நடுமணியாய்ச் சிவம் திகழும் திறம் செப்பியவாறாம். (9)
|