3926.

     அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
          அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
     படர்தரு விந்து பிரணவப் பிரமம்
          பரைபரம் பரன்எனும் இவர்கள்
     சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
          துணையடிப் பாதுகைப் புறத்தே
     இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
          ஏத்துவன் திருவடி நிலையே.

உரை:

     மறைத்து வருத்துகின்ற மலங்களின் தடையால் சிறுமையுறும் பிரமன், திருமால், அரன் மயேச்சுரன், சதாசிவன் ஆகியோரும், தத்துவங்கட்கு மேலாய் விரியும் சத்தி மயமாகிய விந்துவும், பிரணவ வடிவாகிய பிரம்மப் பொருளும், பரம்பரையும், பரம்பரனும் என வரும் இவர்களும், ஒளி வீசுகின்ற மணிகள் இழைத்த அம்பலத்தின்கண் திருநடம் புரிகின்ற இரண்டாகிய திருவடிக்கண் பொருந்திய பாதுகையின் புறத்தே தீண்டுவார் துயர் கெடுமாறு விளங்கும் துகளென அறிந்து சிவத்தின் திருவடி நிலையைப் பராவுகின்றேன். எ.று.

     நீங்காது நின்று ஆன்ம அறிவை மறைப்பது பற்றி, “அடர் மலத் தடையால் தடையுறும் அயன்மால் அரன் மயேச்சுரன் சதாசிவன்”எனக் குறிக்கின்றார். சுத்த தத்துவத்தின்கண் விளங்குவதாகிய விந்து சத்தியை, “வான் படர் தரு விந்து” எனவும், பிரணவப் பொருளாதல் பற்றி, பிரணவப் பிரமம்” எனவும், பரமனுக்கு நீங்காத சத்தியாதலின், “பரை பரம்பரன் எனும் இவர்கள்” எனவும் இயம்புகின்றார். விந்து, பிரமம், பரை, பரம்பரன் என்ற ஐந்து பதங்கட்கும் அதிதேவதைகளாதல் பற்றி, வான் படர்தரு விந்து முதலாக எடுத்தோதுகின்றார். இத்தேவதைகளின் சிறப்பு, கூத்தாடும் பாதுகையில் ஒட்டிய துகள் எனக் கண்டு விலகுகின்றமை வெளிப்பட, “திருநடம் புரியும் துணையடிப் பாதுகைப் புறத்தே இடர் கெட வயங்கு துகளென அறிந்தே ஏத்துவன்” என்றும், மேற்கூறிய பதங்கள் அனைத்தும் துகளென அறிந்தவிடத்து ஏத்துதற் குரியது திருவடி எனத் தெளியப் படுதலால், “ஏத்துவன் திருவடி நிலையே” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், பிரம்மன் முதல் பரம்பரன் ஈறாக வுள்ள தேவ பதங்களைத் துகளென அறிந்து விலக்கியவாறாம்.

     (3)