3927.

     இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
          பிரமன்ஈ சானனே முதலாம்
     மகத்துழல் சமய வானவர் மன்றின்
          மலரடிப் பாதுகைப் புறத்தும்
     புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
          புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
     செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
          தெரிந்தனன் திருவடி நிலையே.

உரை:

     தேவ பதத்தின்கண் இருந்து வருந்தும் பல பகுதிப்பட்ட தேவர்களும், இந்திரன், திருமால் பிரமன் ஈசானன் முதலாக வேள்விகளில் அவி யுணவு நயந்து திரியும் தேவர்களும், பலவேறு சமயத் தேவர்களும் அம்பலத்தில் ஆடுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியில் அணியப்பட்ட பாதுகையின் புறச் சூழலிலும் புகுதற்குரிய தகுதியில்லாத மலத் திரளில் நெளிந்துழலும் சிறு புழுக்கள் என்று அறிந்து அந்நிலைக்கு மேல் உலகியல் தொடர்பினை அறுத் தோங்குகின்ற பெரியோர்களின் திருவுள்ளத்தில் விளங்குகின்ற ஞான ஒளியின்கண், பரம்பொருளின் திருவடியினது உண்மை நிலையை அறிந்து மகிழ்கின்றேன். எ.று.


     பர முத்தியை நோக்கப் பதமுத்தி கீழ்ப்பட்டதாகலின் அதன்கண் உறையும் தேவர்களை, “இகத்துடல் பகுதித் தேவர்” என்றும், இந்திரன் முதலிய தேவர்கள், மண்ணகத்து மக்களும் மேலுள்ள தேவர்களும் செய்யும் யாகத்தில் எழும் அவியுணவு உண்டு வாழ்பவராதலால், “இந்திரன் மால் பிரமன் ஈசானன் முதலாம் மகத்துழல் வானவர்” என்றும், வேறு வேறு சமயத்தவர் உரைக்கும் தேவர்களை, “சமயவானவர்” என்றும் கூறுகின்றார். கூத்தப் பெருமானுடைய திருவடி நீழலின் புறச் சூழலிலும் புகுதற்குரிய தகுதி யில்லாமைக்கு ஏது பிணித்திருக்கும் மலங்களின் செறிவு என்பது விளங்க, “மலரடிப் பாதுகைப் புறத்தும் புகத் தரம் பொருந்தா மலத்துறு சிறிய புழுக்கள்” என்று இகழ்கின்றார். திருவடியின் தோன்று நிலை விளங்குதற்கு, “செகத் தொடர்பு இகந்தார் உளத்தமர் ஒளியில் தெரிந்தனன்” என்று தெரிவிக்கின்றார். செகத் தொடர்பு - உலகியல் தொடர்பு. செகத் தொடர் பிகந்தவர் - சிவஞானச் செல்வராவர்.

     இதனால், ஞானவான்களின் திருவுள்ளத்தில் விளக்கமுறும் சிவஞான ஒளியில், திருவடி நிலை காட்சிப் படுமாறு தெரிவித்தவாறாம்.

     (4)