3928. பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
போந்தவான் முடியதாங் கதன்மேல்
மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
தத்திலே இலங்கிய ததன்மேல்
தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
தழுவினன் திருவடி நிலையே.
உரை: பொன்னின் நிறத்தையுடைய மலை யொன்று, அது சகுணாந்தத்தில் தோன்றும் பெரிய உச்சியை யுடையது; அதன் மேல் பெருமை வாய்ந்த அழகிய சோதித் தம்பம் ஒன்று உளது; அதுதானும் விந்து தத்துவத்தின் உச்சியின் கண்ணதாம்; அதன்மேல் அழகிய சோதிக் கொடி நின்று பரநாதாந்தமாகிய நிலையிலே விளங்குவதாம்; அதற்கு மேல் சிவத்தின் வண்ணமுடையதாய் மணங் கமழும் ஒளி பொருந்திய மலராகத் திருவடி நிலையைக் கண்டு கொண்டேன். எ.று.
பொன் வண்ணப் பொருப்பு என்றது - பொன் மலை போல் தோன்றும் நிர்க்குண வடிவாகிய சிவம். அதன் கீழ் விளங்குவது பல்வகைக் குணங்களோடு கூடிய சகுண நிலை எனப்படும் தத்துவத்தின் உச்சியில் விளங்குவதாகும். அதன் மேல் நிற்பது சிவவொளி செய்யும் ஒளித் தூணாகும். அதன் கீழது விந்து தத்துவத்தின் முடியாகும். அதனை வைந்துவாந்தம் என்று கூறுவர். அதன் மேல் விளங்குவது விந்து தத்துவத்தின் மேலுளதாகிய பரநாதத் தத்துவம். அந்த விந்து தத்துவத்திற்கு மேல் நாத தத்துவத்தின் முடிவுரை நிற்பது சிவசோதி பரப்பும் கொடி. அந்தக் கொடி பறக்கும் இடம் நாத தத்துவத்தின் அந்தமாதலின் அதனைப் “பரநாதாந்தம்” எனவும், அங்கேயது திகழ்வது விளங்க, “சோதிக் கொடி பரநாதாந்தத்திலே இலங்கியது” என இசைக்கிறார். பரநாதாந்தத்தின் மேலது சுத்த சிவமாதலின் அதனை ஞான ஒளி மலராகத் தரிசிக்கின்றமை புலப்பட, “அதன் மேல் தன்வணம் மணக்கும் ஒளி மலராகத் தழுவினன் திருவடி நிலையே” என்று மொழிகின்றார்.
இதனால், நிர்க்குண சிவம் சகுணாந்தத்திலும், சகுணாந்தத்தின் முடியில் ஞான ஒளித் தூண் மயமாய் வைந்துவ தத்துவத்தின் மேல் தோன்றுவதும், அத்தூணின் உச்சியில் அருட் சோதிக் கொடி பரநாதாந்த வெளியில் பறப்பதும், அதன் மேல் பரசிவம் ஞானவொளி மலராகக் காட்சி தருவதும் உரைத்தவாறாம். (5)
|