3929. மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
அமைந்தன சத்திகள் அவற்றின்
கண்ணுறு சத்தா எனும்இரு புடைக்கும்
கருதுரு முதலிய விளங்க
நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
நவின்றனர் திருவடி நிலையே.
உரை: பொன்னிறமுடைய மண் முதலாக வுள்ள பூதங்கள் ஐந்து உள்ளன; அவற்றின் உள்ளும் புறமும் கீழும் மேலும் நெருங்கி, யுறும் நடுவும் பக்கமும் என்ற இவற்றில் பொருந்திய சத்திகளும் அவற்றையுடைய சத்தர்களும் என வுரைக்கும் இருபாலுக்கும் கருதப்படுகின்ற உருவம் குணம் முதலியவை விளங்கப் பொருந்துவன அம்பலத்தில் விளங்கும் இரண்டாகு மென்று திருவடி நிலையைப் பெரியோர் உரைத்துள்ளனர். எ.று.
மண் முதலிய பூதங்களுக்கும் முறையே பொன்மை, வெண்மை, செம்மை, கருமை, தூமம் என்ற நிற வகைகளை முறையாக உரைப்பதால், “மண் முதல் பகர் பொன் வண்ணத்த வுளவான்” என்று கூறுகின்றார். “பொன் பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிவப்பு வன்கால் கருமை வளர்வான் தூமம் என்பார்” (உண். விளக்.) என்று திருவதிகை மனவாசகங் கடந்தார் முதலிய பெரியோர்கள் உரைப்பது காண்க. சிவஞான சித்தியாரும் இம்முறையையே எடுத்துரைக்கின்றது. இப்பூதங்களின் உள்ளும் புறமும் நடுவும் பக்கமுமாகிய எங்கணும் பலவேறு சத்திகளும் அவற்றை யுடைய சத்திமான்களும் மிகுந்து இப்பூதங்கட்கு உரு, குணம், செயல் முதலியவற்றை யுறுவித்து விளங்கச் செய்தலின், “மற்றவற்று உட்புறம் கீழ் மேல் அண்ணுறு நனந்தர் பக்கம் என்று இவற்றின் அமைந்தன சத்திகள் அவற்றின் கண்ணுறு சத்தர் எனும் இருபுடைக்கும் கருதுரு முதலிய விளங்க” என்று உரைக்கின்றார். அண்ணுறு நனந்தர் - அணுகி யிருக்கும் நடுவிடம். சத்திகள் ஒவ்வொன்றின்பாலும் அச்சத்தியையுடைய சத்தர்கள் இருத்தலால் அவர்களை, “கண்ணுறு சத்தர்” என்று குறிக்கின்றார். சத்தர்களைச் சத்திமான் என்பதும் மரபு. சத்தி சத்தர் என்ற இருவர்பாலும் உருவும் குணமும் செயலும் அமைதல் வேண்டி இறைவனுடைய திருவடிகள் பொருந்துவது பற்றி, “இரு புடைக்கும் கரு துரு முதலிய விளங்க நண்ணுறும் உபயம்” என்று மொழிகின்றார். உபயம் - இரண்டு. இறைவனுடைய இரண்டாகிய திருவடிகள் சத்தி சத்தர்களை இயக்குவது விளங்க, “மன்றில் நண்ணுறும் உபயம் என்று நவின்றனர்” என்று நவில்கின்றார்.
இதனால், அம்பலத்தில் விளங்கும் இறைவன் திருவடி இரண்டும் பூதங்களின் நிறம், வடிவம், குணம், செயல் முதலியவற்றை இயக்கும் சத்தி சத்தர்களின் பக்கல் தோய்ந்து விளங்குதல் தெரிவித்தவாறாம். (6)
|