3930.

     தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
          தொல்லையின் எல்லையும் அவற்றின்
     வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
          மன்னிஎங் கணும்இரு பாற்குத்
     தகையுறு முதலா வணங்கடை யாகத்
          தயங்கமற் றதுவது கருவிச்
     சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
          என்பரால் திருவடி நிலையே.

உரை:

     அளவு இத்துணை எனத் தொடுத்து அறியப்படும் பொருட் பகுதிகளின், பழமையான எல்லையும் அவற்றின் வகையும் விரியும் எனப் புலப்படும் யாவும் உளப்பட ஆங்காங்கு நிலைபெற நின்று எப்பாலும் சத்தியும் சத்தருமாகிய இருபாலுக்கும் அழகு பொருந்திய சத்தியை அடுத்த சத்தனாக விளங்குமாறு அதனதன் கருவியாய்ச் சிறப்புறத் திருவடி இரண்டாய் அம்பலத்தின்கண் இறைவன் திருவடி நிலை ஆடல் பொருந்தியுள்ளது எனப் பெரியோர் கூறுவர். எ.று.

     தொகை யளவு எனப் பொதுப்படக் கூறுகின்றமையின், பொருட்களின் தொகையும் அளவும் கூறப்படும் இயல்பு பற்றி அவற்றை, “தொகை யளவு இவை என்று அறிவரும் பகுதி” என்று சொல்லுகின்றார். படைப்புக் காலத்தே அவற்றின் அளவும் எல்லையும் வரையறுக்கப்பட்டனவாயினும் சுட்டறிவுக்கு எட்டாமை பற்றி, “அறிவரும் பகுதித் தொல்லையின் எல்லை” என மொழிகின்றார். அறிவரிய எல்லைத் தாயினும் வகுத்தும் விரித்தும் கண்டறியப்படும் பான்மை யுடைமை பற்றி, “அவற்றின் வகையொடு விரியும் உளப்பட ஆங்கே மன்னி” எனவும், பொருட் டோறும் சத்தியும் சத்தரும் கலந்து இலங்குதலின், “எங்கணும் தகையுறு முதலா வணங்கடையாகத் தயங்க” எனவும் இசைக்கின்றார். இருபால் என்றது சத்தியும் சத்தருமாகிய இரண்டை. சத்தி முதலாகச் சத்தர் அதனுள் அடங்க அமைந்தமை தோன்ற, “அணங்கு அடையாகத் தயங்க” என்று கூறுகின்றார். சத்திக்கும் சத்தருக்கும் அருட் சத்தி கருவியாக நின்று இயக்கி உயர்த்துவதால், “அதுவது கருவிச் சிகையுற” எனவும், இரண்டினையும் தனித்தனி நின்று இயங்க இயக்குவது பற்றி அம்பலத்தில் ஆடும் இறைவன் திருவடி இரண்டும், “அதுவதுவாய்க் கருவியாய்ச் சிகையுற உபயம் என மன்றிலாடும்” என்று உரைக்கின்றார். சிகை - உயர்வு. தகை - தகவு.

     இதனால், பொருள் தோறும் வகையும் விரியுமாய் விரிந்து அவ்விரண்டிலும் சத்தியும் சத்தருமாய் நின்று, ஒவ்வொன்றும் மேம்படுமாறு இரண்டாம் என நின்று அம்பலத்தில் இறைவன் திருவடி ஆடுகின்றது என அறிவுறுத்தவாறாம்

     (7)