3931. மன்றஓங் கியமா மாயையின் பேத
வகைதொகை விரிஎன மலிந்த
ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா
உற்றன மற்றவை எல்லாம்
நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க
நின்றசத் திகளொடு சத்தர்
சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்
என்பரால் திருவடி நிலையே.
உரை: தெளிவாக உயர்ந்த மாமாயையின் பேதங்களின் தொகை வகை விரி என நிறைந்துள்ள வேறுபாடுகள் ஒன்றுக் கொன்று எல்லையில்லாத கோடி கோடிகளாகப் பொருந்தி யுள்ளன; அவை யாவும் நின்ற நிலையில் உருவும், சுவையும் கொண்டு விளங்குமாறு அவற்றின் ஊடே கலந்து நின்ற சத்திகளும் சத்தர்களும் ஒவ்வொன்றினுள்ளும் செயல்படுத்தும்படி இறைவனுடைய இரண்டாகிய திருவடிகள் அம்பலத்தில் ஆடல் புரிகின்றன என்று பெரியோர் கூறுகின்றனர். எ.று.
எண்ணிறந்த ஆன்மாக்களுக்கு வேண்டப் படுகின்ற உடல் கருவி கரணம் போகம் எனத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் காண நிற்கும் மாமாயையின் வேறு வேறான வகைகள் எண்ணிறந்தவாதலின் அவற்றை, “ஓங்கிய மாமாயையின் பேத வகை தொகை விரி என மலிந்த ஒன்றினொன்று அனந்த கோடி கோடிகளா உற்றன” என்று உரைக்கின்றார். மாமாயையின் இயல்பை, “தேகமுறு கரணமொடு புவன போகச் செயலாரும் மாமாயைத் திரட்சி” (சிவப். 32) என்று உமாபதி சிவனார் கூறுவது காண்க. மாமாயையின் கூறாய் அனந்த கோடி கோடிகளாய் விரிந்திருக்கும் ஒவ்வொன்றிலும் சிவத்தின் திருவருள் கலந்து ஆங்காங்கு இருந்து செயல்படும் சத்திகளும் சத்தர்களும் இனிது பணி புரியக் கலந்து நின்று ஒளியாய் விளங்குதல் வேண்டி, “நின்ற அந்நிலையின் உருச்சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர் சென்றதிகரிப்பப் பொதுவில் நடித்திடும்” எனப் புகல்கின்றார். இக்கருத்தை, “மாயை மாமாயை மாயா வரும் இருவினையின் வாய்மை ஆய ஆருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்” (சிவப். 70) எனப் பெரியோர் உரைப்பது காண்க.
இதனால், மாமாயையின் திரட்சி உயிர்கட்கு உடல், கருவி, கரணம், மோகம் என விரிந்து பயன்படும் திறன் இறைவன் திருக்கூத்தால் நிகழுமாறு விளக்கியவாறாம். (8)
|