3932.

     பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
          பெரியஓங் காரமே முதலா
     ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
          என்றவற் றவண்அவண் இசைந்த
     மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
          மன்அதி காரம்ஐந் தியற்றத்
     தேசுசெய் தணிபொன் அம்பலத் தாடும்
          என்பரால் திருவடி நிலையே.

உரை:

     ஓதப்படாது உண்ணப் படுவதாய் உளதாகிய பெரிய ஓங்காரம் முதல் ஓதப்படுகின்ற ஓங்காரம் ஈறாகக் குற்றமற்ற பிரணவத்திற்கு அங்கமும் உபாங்கமும் வேறாகிய அங்கம் என்ற அங்கப் பகுதிகளில் ஆங்காங்கமைந்த மாசற்ற சத்திகளையும் சத்தர்களையும் அவ்வவ்விடத்து அமைவித்துப் படைத்தல் முதலிய அதிகாரம் ஐந்தினையும் இயற்றுமாறு அருளொளி தந்து, சிவ பரம்பொருளின் திருவடிகள் அழகிய பொன்னம்பலத்தின்கண் ஆடல் புரிகின்றன என்று பெரியோர்கள் மொழிகின்றனர். எ.று.

     மானதமாகவும் மந்தமாகவும் உரைக்கப்படுவதாகவும் உள்ள பிரணவ மந்திரம் மூன்றனுள் முதலது மானதப் பிரணவமாதலின் அதனை, “பேசாப் பெரிய ஓங்காரம்” என்றும், ஈற்றிலுள்ள உரைப் பிரணவத்தை, “பேசும் ஓங்காரம்” என்றும் உரைக்கின்றார். இப்பிரணவம் அகரம், உகரம், மகரம் என மூன்றெழுத்துக்களை அங்கமாகவும், உபாங்கமாகவும், வேறங்கமாகவும் கொண்டதெனக் குறிக்கப்படும். வேறங்கம் என்பது சாங்கம் எனவும் வழங்கும். இதனைப் பொதுவாக ஓங்காரம் என்பர். அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்றனையும் அங்கம் எனவும், அகரம் உகரம் என்ற இரண்டினையும் உபாங்கம் எனவும் உரைப்பர். மானதப் பிரணவத்தோடு உரைப்பிரணவத்தையும் உள்ளத்தில் அமைத்துத் தியானிப்பவர் ஆமை போல் புலனைந்தையும் அடக்கும் யோகிகளாவர். மந்தப் பிரணவம் உள்ளொளி பெறுதற்கு உறுதுணை புரிவது என்று பொது நிலையில் வைத்து, “ஊமை எழுத்தோடு பேசும் எழுத்துறில் ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும் ஓமய முற்றது உள்ளொளி பெற்றது நாமய மற்றது நாமறியோமே” (2158) என்று திருமந்திரத்தில் திருமூலர் உரைப்பது காண்க. பிரணவத்தின் அங்கமான அகரம் உகரம் மகரம் என்ற மூன்றும் முறையே ஆன்மாக்களையும் பரம்பொருளையும், இவ்விரண்டினின்றும் ஆன்மாவை வேறு படுத்தும் மலத்தையும் குறிக்கும் என்று திருமந்திரம் (975) கூறுகின்றது. ஆன்மா, மலம் என்ற இந்த இரண்டின் இடமாகச் சத்திகளையும் சத்தர்களையும் நிறுத்திப் படைத்தல், காத்தல், அழித்தல், அளித்தல், மறைத்தல், என்ற ஐந்து தொழில்களையும் நடைபெறுமாறு செய்தற்கு இறைவன் திருவடி நிலை அருளொளி வழங்குகின்றது என்பாராய், “அவண் அவண் இசைந்த மாசறு சத்தி சத்தர் ஆண்டமைத்து மன்னதிகாரம் ஐந்தியற்றத் தேசு செய்து அம்பலத்தாடும்” என்று கூறுகின்றார். தேசு - அருளொளி.

     இதனால், படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்தற்குரிய அதிகாரத்தைச் சத்தி சத்தர்களுக்குத் திருவருள் தந்துளது என்பது தெரிவித்தவாறாம்.

     (9)