3933. பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
வெறுவெளி எனஉல குணர்ந்த
புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
என்பரால் திருவடி நிலையே.
உரை: அருட் சத்தியாகிய பராசத்தி வகுத்தருளும் சுத்த தத்துவ நிலை முதல் அதற்கு மேலுள்ள தத்துவாதீதப் பரவெளி நிலைகளை ஏற்படுத்தி அதன் மேல் உரைத்தற்கியலாத வெறுவெளியும், வெட்ட வெறுவெளியும் எனத் தத்துவ ஞானிகள் உணர்ந்துரைக்கின்ற வெளி நிலைகளில் ஆன்மாக்கள் புகுந்து குற்றமற்ற இன்ப அனுபவம் பெறுதற்கு ஏற்பத் திருவருள் உருக் கொண்டு அழகிய அம்பலத்தின்கண் மறைக்கப்படாத இன்பத் திருக்கூத்தினை இறைவன் திருவடிகள் ஆடுகின்றன. எ.று.
அசுத்தம், சுத்தாசுத்தம், சுத்தம் ஆகிய மூன்று நிலைகளையும் இறைவனது அருட் சத்தி மாயையைக் கலக்கித் தோற்றுவித்தலின் அதனை, “பரை தரு சுத்த நிலை” எனவும், அதற்கு மேல் மாயா மண்டலத்திற்கு அப்பாலுள்ள அதீத நிலையை, “அதீதப் பதி” எனவும், அப்பதிக்கு அப்பால் இத்தன்மைய என வுணர்ந்து உரைக்கப்படாததாய் உள்ள அப்பால் நிலையை, “உரை தர வொண்ணா வெறுவெளி” என்றும், அதற்கப்பாலுள்ள நிலையை, “வெட்ட வெறுவெளி” என்றும் வடலூர் வள்ளல் குறிக்கின்றார். இச்சுத்த நிலை முதலாகிய நிலைகளையும் அவற்றிற்கு அதீதமாய் உள்ள நிலைகளையும் உணர்பவர் தத்துவ ஞானிகளாதலால் அவர்களை, “உலகு” என்னும் சொல்லால் உரைக்கின்றார். சுத்த நிலை முதலிய அதீத நிலைகளை யுணர்ந்த ஞானிகள் தமது ஞானப் பயனாகப் பெறற்குரிய குற்றமற்ற இன்பானுபவத்தை அவர்கட்குத் தரும் பொருட்டுப் பொற் சபையில் கூத்தப் பெருமான் திருவுருக் கொண்டு பொன்னம்பலத்தில் திருவடிகள் இன்ப நடம் புரிகின்றன என்பாராய், “உலகுணர்ந்த புரையறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திருவுருக் கொண்டு பொற் பொதுவில் திரையறும் இன்ப நடம் புரிகின்ற என்பரால் திருவடி நிலையே” என்று இயம்புகின்றார்.
இதனால், தத்துவ ஞானிகட்கு இன்பம் தரும் பொருட்டுப் பரம்பொருள் கூத்தப் பெருமான் திருவுருக் கொண்டு பொன்னம்பலத்தில் ஆடுகின்றார் என்பது தெரிவித்தவாறாம். (10)
|