44. காட்சிக் களிப்பு
அஃதாவது, சிவபெருமானுடைய பலவேறு இயல்புகளையும் எடுத்தோதி அப்பெருமானுடைய திருவருள் உருவினைக் கண்டு தரிசித்துப் பெற்ற இன்பத்தை எடுத்துரைப்பதாம்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3934. அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
உரை: எல்லாம் அறிந்த பெருமானும், அறிவுடைய உயிர்களில் அறிவுக் கறிவானவனும், திருவருள் ஞானமாகிய பெரிய ஒளியையுடையவனும், அடியவனான என்னுடைய அன்பின்கண் தோய்ந்து இருப்பவனும், எதனையும் இனிது எளிதிற் செய்ய வல்ல சித்துத்தன்மையில் மிக்கவனும், சிறுமை பயக்கும் கீழ்மை நெறியில் செல்கின்றவர்களைச் சேராமல் பிரிந்திருப்பவனும், என்னுடைய மனத்தின்கண் ஒன்றாய்க் கலந்து கொண்ட அன்புடைய பெருமானும், எனக்கு இனிப் பிறவி வாரா வண்ணம் அதனைப் போக்கியவனும், என்னை விலக்காமல் நன்னெறியில் நிறுத்தி ஆண்டு கொண்டவனுமாகிய எங்கள் பெருமானைக் கண்ணாற் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். எ.று.
முற்றும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் முற்றறிவினன் என நூலோர் கூறுதலால் சிவனை, “அறிந்தான்” எனவும், அறிவதும், அறியப் படுவதும் என வேறாய் நின்று அறிவதின்றி அறியும் அறிவுக்கு அறிவாய் விளங்குவது பற்றி, “அறிவறிவுக் கறிவான்” எனவும் இயம்புகின்றார். அருளின் பேரொளியே தனக்கு உருவாகக் கொண்டவனாதலால் சிவனை, “அருட் பெருஞ் சோதியினான்” என அறிவிக்கின்றார். அவனது திருவடியையே சிந்திக்கும் தம்முடைய அன்பின்கண் செறிந்து கலந்திருத்தல் தோன்ற, “அடியேன் அன்பில் செறிந்தான்” என்றும், எல்லாவற்றையும் எளிதில் இனிது செய்ய வல்ல அறிவுப் பொருளாய் விளங்குவது பற்றி, “எல்லாஞ் செய் வல்ல சித்தாய்ச் சிறந்தான்” என்றும் தெரிவிக்கின்றார். வரம்பிலாற்ற லுடையவன் என்பது பற்றி வடலூர் வள்ளல் இவ்வாறு கூறுகின்றார். தாழ்ந்தவரையும் கீழ்மையில் வீழ்ந்தவரையும் அருள் கூர்ந்து உயர்த்தும் இயல்பினனாயினும், தனது திருவருள் நெறியின்கண் நில்லாது நீங்கினவர்களைத் தானும் நீங்குபவன் என்றற்கு, “சிறு நெறியில் சென்றார் தம்மைப் பிறிந்தான்” என்று கூறுகின்றார். சிறு நெறியில் சென்றவர்களைச் சேர்ந்த வழித் தமது திருவருட் செம்மை நிலை மாசுறுவது பற்றி, “சிறு நெறியில் சென்றார் தம்மைப் பிறிந்தானை” என்று விளம்புகின்றார். இக்கருத்தே புலப்படத் திருநாவுக்கரசரும், “மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக் காட்டுறையும் மழுவாட் செல்வர்” (கோயில்) என்று கூறுவது காண்க. தம்முடைய உள்ளத்தில் இறைவன் கலந்து கொண்டதற்குக் காரணம் தம் மேல் இறைவன் கொண்டு அன்பு என்பாராய், “என்னுளத்தில் கலந்து கொண்ட பிரியமுள்ள பெருமான்” என்று குறிக்கின்றார். தம்பால் அன்பு கொண்ட நன்மக்களின் பிறவி வேர் அறுத்த பிஞ்ஞகன் எனப்படுவது பற்றி, “பிறவி தன்னை எறிந்தான்” என்றும், தம்மை வந்தடைந்து அருள் கொடுத்து ஆண்ட திறம் விளங்க, “என்னை எறியாது எடுத்தாண்டான்” என்றும் இயம்புகின்றார். என்பாலுள்ள குற்றங்களைக் கண்டு வெறுத் தொதுக்காமல் அன்புடன் ஆண்டு கொண்டான் என்பது விளங்க, “என்னை எறியாது எடுத்தாண்டான்” எனப் புகழ்கின்றார்.
இதனால், எல்லாம் அறிபவன் அறியும் உயிர்கட்கு அறிவாய் இருந்து அறிவன அறிவிக்கின்றான் என்றும், அருட் பெருஞ் சோதியன் என்றும், சிவனைப் புகழ்ந்தவாறாம். (1)
|